போதைப்பொருள் கடத்தல்காரர்களின் நடவடிக்கையில் சிக்காமல் இருப்பது எப்படி என்பது தொடர்பில் கடற்றொழிலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு பணிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரால், போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு இந்த பணிப்பு விடுக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சர் தலைமையில் கடற்றொழில் அமைச்சின் 25 மாவட்ட இணைப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல் அமைச்சில் இன்று (23.09.2025) நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே, அமைச்சின் செயலாளர் பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் துரைசார் அதிகாரிகள் ஆகியோருடன் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கடற்றொழிலாளர்களை, போதைப்பொருள் கடத்தலுக்கு கடத்தல்காரர்கள் பயன்படுத்தப்படுவது பற்றி போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு விளக்கம் அளித்தது.
இதனையடுத்து இதனை தடுக்கும் வகையில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். அதேபோல இது பற்றி கடற்படையினருக்கும் தெரியப்படுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
அத்துடன், உள்நாட்டு நீர்நிலைகளில் மீன் உற்பத்திகளை பெருக்குவது பற்றி நெக்டா நிறுவனத்தின் தலைவர் விளக்கமளித்தார். இதற்குரிய ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
அதேபோல மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உள்நாட்டு நீர்நிலைகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுபவர்கள் எதிர்நொக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டன.