இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றும் நோக்கிலும், எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு சலுகை விலையில் மீன் உற்பத்திகளை வழங்குவதை இலக்காகக் கொண்டும் விசேட முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் இன்று (06) மீன்பிடிக் கூட்டுத்தாபன வளாகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், 'புத்தாண்டுக்கு புதிய மீன் புதிய விலையில்' எனும் தொனிப்பொருளின் கீழ் கொப்பரா மற்றும் சப்பரா போன்ற மீன்களை சலுகை விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். ஜனாதிபதி அவர்களினால் வழங்கப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் மீன்பிடிக் கூட்டுத்தாபன ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் பணிக்கொடை (Gratuity) கொடுப்பனவுகளை செலுத்துவதை துரிதப்படுத்துவது குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
திறைசேரி ஒதுக்கீட்டின் மூலம் கடனைச் செலுத்துதல் மற்றும் ஜப்பானிய உதவியின் கீழ் கிடைக்கும் குளிரூட்டப்பட்ட பாரவூர்திகள் (Freezer Trucks) திட்டம், அத்துடன் 86 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் 150 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட புதிய குளிரூட்டல் களஞ்சியம் மற்றும் அதிவேகக் குளிரூட்டி (Blast Freezer) திட்டத்தை துரிதப்படுத்தவும் இங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் இங்கு கருத்துத் தெரிவிக்கையில், நெருக்கடிகளுக்கு மத்தியிலும் அரசாங்கம் ஊழியர் நலன்புரி விடயங்களில் அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும், அண்மையில் வழங்கப்பட்ட 10,000 ரூபா ஊக்குவிப்புக் கொடுப்பனவு அதற்கு சான்று எனவும் குறிப்பிட்டார். கட்சி பேதமின்றி நிறுவனத்தின் வளர்ச்சிக்காக சகோதரத்துவத்துடன் செயற்படுமாறும், நிறுவனத்தின் தூய்மை மற்றும் ஒழுங்கை பேணுவது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் வலியுறுத்தினார்.
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு. மொஹமட் நவ்ரஸ் நசார் அவர்கள் குறிப்பிடுகையில், இனிவரும் காலங்களில் சாத்தியக்கூறு ஆய்வின்றி விற்பனை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட மாட்டாது எனவும், மேல் மாகாணத்திற்குள் விற்பனை வலையமைப்பை விரிவுபடுத்தவும், முச்சக்கர வண்டிகள் மூலம் மீன் உற்பத்திகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.










