எதிர்பாராத பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியிலும், புதிய எதிர்பார்ப்புகளுடன் பிறக்கும் இந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து கடற்றொழில் சமூகம் உட்பட இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம், நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு உண்மையான மாற்றத்தைக் குறித்துநிற்கும் மக்கள் நல ஆட்சியை நிறுவியுள்ளது. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகப்படியான சலுகைகளைக் குறைத்து, அந்த நிதியை மக்களின் நலன்புரிச் சேவைகளுக்காக நேரடியாகப் பயன்படுத்துவதற்கு, ஊழலற்ற தூய்மையான அரசாட்சியின் முன்மாதிரியைப் பின்பற்றி நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
'அஸ்வெசும' போன்ற நலன்புரித் திட்டங்கள் மாத்திரமன்றி, கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் - குறிப்பாக 'டிட்வா' சூறாவளி மற்றும் எரிபொருள் நெருக்கடியின் போது - அரசாங்கம் வழங்கிய நேரடி நிதி கொடுப்பனவுகள் மற்றும் நிவாரணங்கள் ஊடாக, அரசாங்கத்தின் ஒவ்வொரு தீர்மானத்தினதும் மையப்புள்ளி பொதுமக்களே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் தூரநோக்கை யதார்த்தமாக்குவதே எமது இலக்காகும். இந்தப் புத்தாண்டின் புத்துணர்வு, வடக்கு - தெற்கு என்ற வேறுபாடின்றி ஒவ்வொரு கடற்றொழில் குடும்பத்திற்கும் உண்மையான சுபிட்சத்தைக் கொண்டுவரும் என நான் நம்புகிறேன். ஒரே தாயின் பிள்ளைகளாகக் கைகோர்த்து, பிரிவினைகளை மறந்து, பொதுவான தேசிய இலக்கிற்காக அணிதிரள்வதற்கு இந்தப் புத்தாண்டு நம் அனைவருக்கும் ஆசீர்வாதமாக அமையட்டும்!
இந்தப் புத்தாண்டில் ஒட்டுமொத்த கடற்றொழில் சமூகத்தினதும், இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் வாழ்க்கையை சுபிட்சத்தினால் நிரப்புவதற்கு அதிகபட்சமாக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என உறுதியளிக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் சுபிட்சம் நிறைந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
இராமலிங்கம் சந்திரசேகர்,
அமைச்சர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு.
2026.04.10





