ஜப்பானின் டோக்கியோவில் கடந்த ஜூன் 02 முதல் 04 வரை நடைபெற்ற ‘தீவு நாடுகளின் சமுத்திர மாநாட்டில்’ (Island States Ocean Summit - ISOS) இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் ஜப்பானிய பேரரசர் நருஹிட்டோ (Emperor Naruhito), நோர்வேயின் இளவரசர் ஹாகோன் (Crown Prince Haakon) மற்றும் ஜப்பானிய பிரதமர் சனாயே டகாயிச்சி (Sanae Takaichi) உள்ளிட்ட 35 நாடுகளின் தலைவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர்கள் பங்கேற்றனர். இம்மாநாட்டிற்கு இணையாக, நிப்போன் அறக்கட்டளையின் (Nippon Foundation) தலைவர் யோஹெய் சசகாவா (Mr. Yohei Sasakawa) அவர்களுடனும் அமைச்சர் விசேட கலந்துரையாடலை மேற்கொண்டார்.
மாநாட்டில் விசேட உரையொன்றை நிகழ்த்திய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், காலநிலை மாற்றம், சமுத்திரக் கடல்கள் மாசடைதல், அதிகப்படியான மீன்பிடி மற்றும் உயிரியல் பன்முகத்தன்மை மீதான பாதிப்புகள் போன்ற சிக்கலான சவால்களை எந்தவொரு நாடும் தனித்து எதிர்கொள்ள முடியாது என்று வலியுறுத்தினார்.
"இந்தியப் பெருங்கடலின் மத்தியில் அமைந்துள்ள ஒரு தீவு நாடு என்ற ரீதியில், இலங்கையின் அடையாளம், பொருளாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை சமுத்திரத்துடனேயே ஆழமாகப் பிணைந்துள்ளன. தீவு நாடுகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு செயல்முறை ரீதியான சர்வதேச பங்களிப்பு அவசியமாகும். குறிப்பாக நவீன கடற்றொழில் தொழில்நுட்பம், செயற்கைக்கோள் கண்காணிப்பு முறைமைகள் மற்றும் தரவுப் பரிமாற்றங்களுக்காக வளர்ந்த நாடுகளின் ஒத்துழைப்பு வளர்ந்து வரும் தீவு நாடுகளுக்குக் கிடைக்க வேண்டும்" என அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
இலங்கை தற்போது அறிவியல் தரவுகளின் அடிப்படையிலான கடற்றொழில் முகாமைத்துவக் கொள்கையையும், ‘நீலப் பொருளாதார’ (Blue Economy) வேலைத்திட்டத்தையும் முன்னெடுத்து வருவதாகவும், கண்டல் காடுகள், பவளப்பாறைகள் மற்றும் கடற்புற்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் சிறிய அளவில் துறையில் ஈடுபாடு கொண்ட மீனவர்கள், பெண்கள் மற்றும் கரையோர இளைஞர்களை வலுப்படுத்துவதே அனைத்து கடல்சார் நிர்வாக சீர்திருத்தங்களின் மையமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் ஊடாக ஜப்பான் உள்ளிட்ட ஏனைய தீவு நாடுகளுடன் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் துறையில் புதிய தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்புகளைக் கட்டியெழுப்புவதற்கான வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
இம்மாநாட்டில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் அமைச்சருடன் கலந்துகொண்டார்.





