en banner

OIPநாடளாவிய ரீதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, மீனவர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் தரவுகளின்படி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், மன்னார், புத்தளம் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60-70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதன் காரணமாக கடல் அலைகள் மிக உயரமாக எழும்பும் அபாயமும் காணப்படுகிறது. இதனால் குறித்த கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் சிறிய படகுகள் மற்றும் பாரம்பரிய படகுகள் மறு அறிவித்தல் வரை மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பணிப்பாளர் நாயகம் கடுமையாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கற்பிட்டியிலிருந்து சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகம் அதிகரிக்கும், அலைகள் உயரும் அபாயம் உள்ளது. இந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு முன்னர் நிலவும் வானிலை குறித்து மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் எனவும், பாதுகாப்பாக மீன்பிடிக்கக்கூடிய தகுந்த சூழல் இருந்தால் மாத்திரமே மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் எனறும், அபாயகரமான சூழ்நிலைகளில் மீன்பிடிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியலுள்ள மீனவ சமூகத்தினரை பணிப்பாளர் நாயகம் பின்வருமாறு வலியுறுத்தியுள்ளார்:

"மீன்பிடித் தொழிலுக்காகப் புறப்படுவது முதல், கடலில் மீன்பிடிக்கும் காலம் மற்றும் மீண்டும் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பும் வரையிலான முழுமையான காலப்பகுதியில் 'உயிர்காக்கும் அங்கிகளை' (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயமாகும் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம். கடந்த காலங்களில் ஏற்பட்ட விபத்துகளின் போது, உயிர்காக்கும் அங்கிகளை முறையாக அணிந்திருந்த மீனவர்களின் உயிர்கள் பாதுகாக்கப்பட்டன எனறும், அவ்வாறு செய்யாதவர்கள் தங்களது பெறுமதியான உயிர்களை இழக்க நேரிட்டது என்பதையும் நீங்கள் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்."

வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றால் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகள் குறித்து தொடர்ந்து அவதானத்துடன் இருக்குமாறும், தங்களது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாத்துக்கொண்டு பொறுப்புடன் செயல்படுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

Youtube