இந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு எமது கலாசார அடையாளத்தையும் தேசிய சகோதரத்துவத்தையும் உலகிற்கு பறைசாற்றும் ஒரு உன்னதமான சந்தர்ப்பமாகும். நீலக்கடலோடு போராடி தேசிய பொருளாதாரத்திற்கும் உணவுப் பாதுகாப்பிற்கும் முன்னோடிகளாக விளங்கும் எமது கடற்றொழில் சமூகத்திற்கு, இந்த மாறுதல் காலம் உண்மையிலேயே புதிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுவரும் ஒரு காலப்பகுதியாக அமையும் என நான் நம்புகிறேன்.
கடந்த ஆண்டு நம் அனைவருக்கும் மிகவும் சவாலான ஒன்றாக அமைந்தது. குறிப்பாக 'டிட்வா' சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்ட எரிபொருள் சிக்கல் என்பன கடற்றொழில் துறையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தின. எவ்வாறாயினும், அந்த இக்கட்டான சூழ்நிலைகளிலும் எமது கடற்றொழில் சமூகம் காட்டிய தளராத தைரியத்தையும் அர்ப்பணிப்பையும் நான் மிகுந்த கௌரவத்துடன் பாராட்டுகிறேன்.
மக்களின் வாழ்க்கைக்கு உண்மையான மதிப்பைப் பெற்றுக்கொடுப்பதற்கே தற்போதைய அரசாங்கம் எப்போதும் முன்னிற்கிறது. கௌரவ ஜனாதிபதி அவர்களினால் 'அஸ்வெசும' உட்பட அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கி பிரகடனப்படுத்தப்பட்ட விசேட நிவாரணப் பொதி மற்றும் கடற்றொழில் மக்களுக்காகவே வழங்கப்பட்ட விசேட எரிபொருள் கொடுப்பனவு என்பன, எமது ஆட்சியின் மனிதாபிமான மற்றும் பொறுப்புக்கூறல் தன்மையை உறுதிப்படுத்துகின்றன. ஆழக்கடல் சுழியோடிகள் முதல் பலநாள் விசைப்படகு உரிமையாளர்கள் வரை ஒட்டுமொத்தத் துறையையும் பாதுகாப்பதே எமது நோக்கமாகும்.
"வளமான நாடு - அழகான வாழ்க்கை" எனும் உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், உங்களது கரங்களை வலுப்படுத்துவது எனதும் எமது அரசாங்கத்தினதும் முதன்மையான பொறுப்பாக நான் கருதுகிறேன். பாரம்பரிய புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அப்பால் சென்று, ஒரே தேசமாக கைகோர்த்து நாட்டின் உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த இந்தப் புத்தாண்டில் புதிய வேகத்துடன் ஒன்றிணைவோம்.
பிறக்கும் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் நோய் நொடிகள் அற்ற ஆரோக்கியம், அமைதி மற்றும் சுபிட்சம் நிறைந்த வெற்றிகரமான ஆண்டாக அமையட்டும் என இதயப்பூர்வமாகப் பிரார்த்திக்கிறேன்!
உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!
ரத்ன கமகே
பிரதி அமைச்சர்
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு
2026.04.10





