‘முழு ‘நாடும் ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக, மார்ச் 01 ஆம் திகதி ஆரம்பமான "போதைப்பொருள் தடுப்பு வாரத்தின்" கீழ், போதைப்பொருள் கடத்தலுக்கு மீன்பிடிப் படகுகள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களினால் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு விரிவான விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் முதற்கட்டமாக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்களின் தலைமையில், மார்ச் 04 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும், 05 ஆம் திகதி காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டங்கள் நடைபெற்றன. இவ்வேலைத்திட்டங்களில் உயர்மட்டப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், அந்தந்த மாவட்டங்களுக்குப் பொறுப்பான கடற்படை மற்றும் கரையோரப் பாதுகாப்புப் படையின் கட்டளைத் தளபதிகளும் கலந்துகொண்டனர்:
* ஹம்பாந்தோட்டை: கமாண்டர் (Navigation) எஸ்.டி. வீரசிங்க, கமாண்டர் (Navigation) எம்.என். ஹெட்டிகே
* மாத்தறை: கமாண்டர் ஈ.டி.எஸ். திஸாநாயக்க
* காலி: கமாண்டர் டபிள்யூ.எம்.ரி.பி. வலிசுந்தர
* களுத்துறை: லெப்டினன்ட் கமாண்டர் டபிள்யூ.டபிள்யூ.எம்.டி.ஆர்.எஸ்.பி. திஸாநாயக்க
நாட்டிற்குள் போதைப்பொருள் வரும் பிரதான வழியாகக் கடல் மார்க்கம் இனங்காணப்பட்டுள்ளதால், இந்த வேலைத்திட்டத் தொடரின் முதன்மை அவதானம் பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்கள் மற்றும் படகு ஓட்டுநர்களை (Skippers) விழிப்புணர்வூட்டுவதிலேயே செலுத்தப்பட்டது. இலங்கை கடற்படையினர் தமது கடல் நடவடிக்கைகள் மற்றும் படகுகளைப் பரிசோதிக்கும் முறைமைகள் குறித்து தெளிவுபடுத்தியதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் அதிகாரிகள், போதைப்பொருள் கடத்தலுக்குப் படகுகள் பயன்படுத்தப்பட்ட முன்னைய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு, சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகளை முன்கூட்டியே இனங்கண்டு கொள்வதற்குப் படகு உரிமையாளர்களை வலுவூட்டினர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்:
"போதைப்பொருள் கடத்தலுக்குக் கடல் மார்க்கத்தைப் பயன்படுத்துவது எமது நாட்டிற்கு ஒரு பாரிய அச்சுறுத்தலாகும். இதில் ஈடுபடும் ஒரு சிறு குழுவினரால் ஒட்டுமொத்தக் கடற்றொழில் துறையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுகின்றது. படகு உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களை விழிப்புணர்வூட்டி, தமது பணியாளர்களின் சந்தேகத்திற்கிடமான நடத்தைகளை முன்கூட்டியே இனங்கண்டு கொள்வதற்கு அவர்களைப் பலப்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். இதன் மூலம் போதைப்பொருள் அனர்த்தத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கவும், அப்பாவி மீனவத் தொழிலாளர்கள் கடத்தல்காரர்களின் வலையில் சிக்காது அவர்களைப் பாதுகாக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம். ‘போதையற்ற நாடு’ ஒன்றை உருவாக்கும் தேசிய கொள்கைக்குக் கடற்றொழில் அமைச்சு வழங்கும் முழுமையான பங்களிப்பு இதுவாகும்."
இவ்வேலைத்திட்டங்களில் பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்களின் உற்சாகமான பங்கேற்பு மற்றும் அவர்களின் கருத்துக்கள் இங்கு விசேட பாராட்டுக்குள்ளானதுடன், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இப்போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களுக்குத் தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக அவர்கள் இங்கு ஏகமனதாக உறுதியளித்தனர்.
தென் கரையோரத்தின் பிரதான நான்கு மீன்பிடி மாவட்டங்களை உள்ளடக்கி நடாத்தப்பட்ட இந்த விழிப்புணர்வுத் தொடர் வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக அமைந்ததுடன், கடற்றொழில் துறையைச் சட்டவிரோதக் கடத்தல்களிலிருந்து மீட்டெடுப்பதற்கு, ஒட்டுமொத்த மீனவ சமூகத்தினதும் ஒத்துழைப்புடன், அமைச்சு தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.








