en banner

 DSC6075.jpgவளைகுடா பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலை கருத்திற்கொண்டு, சர்வதேச கடற்பரப்பில் தொழிலில் ஈடுபடும் எமது நாட்டின் பலநாள் மீன்பிடிப் படகுகளின் பாதுகாப்புத் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த தெரிவித்தார்.

தற்போது 2000 முதல் 2500 வரையிலான பல நாள் மீன்பிடிக் கலன்கள், இலங்கைக்குச் சொந்தமான பிரத்தியேக பொருளாதார வலயம் (EEZ) மற்றும் சர்வதேசக் கடற்பரப்பு உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலில் நாளாந்தம் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலை காரணமாக இந்நாட்டின் எந்தவொரு மீன்பிடிக் கலனுக்கும் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் உறுதிப்படுத்தினார். இந்த இராணுவ நடவடிக்கைகள் குறிப்பிட்ட இலக்குகளை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறுவதால், எமது மீன்பிடிக் கலன்களுக்கு அதனால் நேரடி அச்சுறுத்தல் இல்லை என்பதே திணைக்களத்தின் அவதானிப்பாகும்.

அவ்வாறாயினும், மீன்பிடிப் படகுகள் மற்றும் பணியாளர்களின் உச்சபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கடற்றொழில் சமூகத்தினரிடம் கடுமையாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறது:

* எப்பொழுதும் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபடும் கடற்பிரதேசங்களில் மாத்திரம் தொழிலில் ஈடுபடுதல்.
* இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு படகு அல்லது வேறு ஏதேனும் அந்நிய கப்பல்கள் அல்லது படகுகளின் அருகில் செல்லாதிருத்தல்.
* மீன்பிடித் தொழிலுக்காகச் செல்லும்போதும் திரும்பும்போதும் வழமையாகப் பயன்படுத்தும் பயணப் பாதைகளின் ஊடாக மாத்திரம் பயணித்தல்.
* மீன்பிடித் தொழில் முடிவடைந்தவுடன் உடனடியாக மீண்டும் கரைக்குத் திரும்புதல்.

எந்தவொரு அவசர நிலையிலும் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக கடற்றொழில் திணைக்களத்தின் படகுகள் கண்காணிப்பு நிலையம் மற்றும் கரையிலுள்ள வானொலி நிலையங்கள் 24 மணிநேரமும் செயற்பாட்டில் உள்ளன. இதற்கு மேலதிகமாக, கொழும்பில் இயங்கும் இலங்கை கடற்படையினரின் கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையமும் (Colombo MRCC) 24 மணிநேரமும் செயற்படுகின்றது.

கொழும்பு MRCC நிலையத்துடன் பின்வரும் அலைவரிசைகளின் (கிலோஹர்ட்ஸ் - kHz) ஊடாக வானொலி தகவல் பரிமாற்ற சாதனங்கள் மூலம் மீனவர்கள் தொடர்புகொள்ள முடியும்:
* 6215.00 kHz
* 8291.00 kHz
* 4225.00 kHz

இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றி, மிகவும் அவதானத்துடன் தமது தொழிலில் ஈடுபடுமாறு அனைத்து பலநாள் மீன்பிடிப் படகு உரிமையாளர்களிடமும் கடற்றொழிலாளர்களிடமும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கிறது.

சமீபத்திய செய்திகள்

Youtube