யாழ்ப்பாண மாவட்டத்தின் பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மூன்று பாரிய அபிவிருத்தித் திட்டங்கள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ விமல் ரத்நாயக்க ஆகியோரின் தலைமையில் 2025.09.18 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், வட மாகாண ஆளுநர் கௌரவ என். வேதநாயகன், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்தின் கீழ் பின்வரும் பிரதான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன:
காரைநகர் சீ-நோர் படகு கட்டும் தளம்: நீண்ட காலமாக செயலிழந்து காணப்பட்டமையால் வட பகுதி மீனவர்கள் முகங்கொடுத்த பெரும் சிரமங்களுக்குத் தீர்வாக, இலங்கை அரசின் மற்றும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன், 330 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் படகு கட்டும் தளத்தைப் புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
கொழும்புத்துறை இறங்குதுறை புனரமைப்பு:
இப்பகுதி மீனவர்களின் வசதிக்காக 140 மில்லியன் ரூபாய் செலவில் கொழும்புத்துறை இறங்குதுறையை புனரமைக்கும் பணி மற்றும் பிரதேசத்தின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், 65 மில்லியன் ரூபாய் செலவில் யாழ்ப்பாணம் உதயபுரம் வீதியை புனரமைக்கும் பணியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் கூறியதாவது:
"நாட்டை அபிவிருத்தி செய்யும் அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தைக் கட்டியெழுப்பவும் நாம் விசேட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். இந்தத் திட்டங்களின் மூலம் இங்கு வாழும் மக்களுக்கு நிலையான வருமான வழிகள் உருவாக்கப்படும். குறிப்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி குறைந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை வழங்குவதை நாம் ஆரம்பித்துள்ளோம். கடற்றொழில் துறைமுகங்கள் மற்றும் இறங்குதுறைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நாம் எப்பொழுதும் முன்னுரிமை அளிப்போம்."
இந்த ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம், யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்றொழில், போக்குவரத்து மற்றும் பொருளாதாரத் துறைகளில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.