en banner

WhatsApp Image 2026 04 22 at 14.12.38நோர்வேயின் பெர்கன் (Bergen) நகரில் நடைபெற்று வரும் ‘One Ocean Week’ சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான இலங்கைத் தூதுக்குழுவினர், பெர்கன் மாகாண சபைத் தலைவி (Chief of County Council) கிறிஸ்டின் பி. மேயர் (Christine B. Meyer) உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவுடன் நேற்று (21) விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்நிகழ்வில் நோர்வேயின் பெர்கன் (Bergen) பிராந்தியத்திற்கான இலங்கையின் கௌரவத் தூதுவர் ஸ்டோல் எச். பெடர்சன் (Ståle H. Pedersen) அவர்களும் கலந்துகொண்டார்.

இங்கு இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல்களும் அதன் முடிவுகளும் பின்வருமாறு :

மீன்பிடி படகுகளுக்கு மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் தொழில்நுட்பம் :

கடல்சார் வலுசக்தி தீர்வுகளை வழங்கும் உலகின் முன்னணி நிறுவனமான ‘Corvus Energy’ நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, மீன்பிடி படகுகளுக்கு மின்கல வலுசக்தி மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் (Fuel Cell) தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் தயாரித்த சில படகுகளுக்கு ஏற்கனவே இந்த நிறுவனம் மின்கல அமைப்புகளை வழங்கியுள்ளது. எரிபொருள் செலவு மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கில், இலங்கையில் இத்தகைய மின்கல தொகுப்புகளை பொருத்தும் தொழிற்சாலை அல்லது முன்னோடி திட்டமொன்றை (Pilot Project) ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவம் மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு :

பெர்கன் பிராந்தியத்தின் அவசரகால தயார்நிலை மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் (Emergency Preparedness) பிரதானி அக்னார் ட்வெட்டன் (Agnar Tveten) உடனான சந்திப்பின் போது, அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்கு நோர்வே அரசு மக்களையும் அமைப்புகளையும் தயார்படுத்தியுள்ள விதம் குறித்து ஆராயப்பட்டது. எந்தவொரு அவசர நிலையையும் எதிர்கொள்வதற்காக ஆறுமாத காலத்திற்குத் தேவையான அத்தியாவசிய மருந்து கையிருப்புகளைப் பேணுதல், அவசர காலங்களில் தனியார் துறையின் சொத்துகளை அரசாங்கம் பயன்படுத்துவதற்கான சட்ட ரீதியான அதிகாரம் மற்றும் மக்களுக்கு முன்கூட்டியே அறிவிக்கும் முறைகள் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இந்த அனுபவங்களை இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ திட்டங்களை மேலும் முறைப்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எஸ்.ஜே.கஹவத்த ஆகியோரும் இணைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube