இலங்கையின் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் சர்வதேச மீன் ஏற்றுமதிச் சந்தையைப் பாதுகாக்கும் நோக்குடன், சட்டவிரோத, அறிக்கையிடப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்திற்கும் ஏனைய 11 பிரதான அரச நிறுவனங்களுக்கும் இடையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் 2025.09.22 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இலங்கையின் கடற்றொழில் சட்டங்களை வலுப்படுத்தல், அருகிவரும் கடல் வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) போன்ற பிரதான சந்தைகளுக்கான மீன் ஏற்றுமதியை தொடர்ச்சியாகப் பேணுவதை உறுதி செய்தல் ஆகியன இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன. கடந்த பெப்ரவரி மாதம் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் போது வழங்கப்பட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்: "ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து மீன் தடை அபாயத்தை நாம் எதிர்கொண்டபோது, ஒரு அரசாங்கம் என்ற வகையில், இந்த நிலையை மாற்றுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக நாம் உறுதியளித்தோம். இன்று கைச்சாத்திடப்படும் இந்த ஒப்பந்தம், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான ஒரு முக்கிய படியாகும். எமது கடல் வளங்களையும், மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்கும், ஒரு உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து, ஒழுங்குமுறைகளுடன் செயற்படுவது இன்றியமையாதது."
இந்த ஒப்பந்தத்திற்காக, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்துடன், இலங்கை கடற்படை, கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை பொலிஸ், இலங்கை சுங்கம், துறைமுக அதிகாரசபை, வெளிவிவகார மற்றும் நீதி அமைச்சுக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது பங்களிப்பை வழங்குகின்றன.
இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம், இலங்கையின் நற்பெயரைப் பாதுகாத்து, பேண்தகு கடற்றொழில்துறைக்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க அமைச்சு எதிர்பார்க்கின்றது.