கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் மாகாண சபைகளின் கீழ் செயற்படும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தேசிய மட்டத்தில் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கில் ஒரு விசேட கலந்துரையாடல் இன்று (22) கடற்றொழில் அமைச்சு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, அனைத்து மாகாண சபைகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண பிரதம செயலாளர்கள், அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், மத்திய அரசுக்கும் மாகாண சபைகளுக்கும் இடையில் நிலவும் ஒருங்கிணைப்புக் குறைபாடுகளால், வளங்கள் வீணடிக்கப்படுவதாகவும் திட்டங்களின் வினைத்திறன் குறைவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இக்கலந்துரையாடலின் போது, மத்திய அரசு மற்றும் மாகாண அதிகாரிகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து, வள விரயத்தைத் தடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. அதற்கமைய, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), மாகாண அமைச்சுக்களுடன் இணைந்து நீர்த்தேக்கங்களுக்கான ஒருங்கிணைந்த வர்த்தக திட்டங்களைத் தயாரிப்பதற்கும், தன்னிறைவு அடையும் வகையில் நன்னீர் மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதற்கான ஒரு பேண்தகு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், "மாகாண சபை, மத்திய அரசு என்ற பேதமின்றி, நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். வளங்களை வினைத்திறனாக முகாமைத்துவம் செய்து, கடற்றொழில்துறையை, குறிப்பாக நன்னீர் மீன்பிடித்துறையை கட்டியெழுப்புவதற்கு இந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் இன்றியமையாதது. ஒரு நாடாக எமது உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் கடற்றொழில்துறைக்கு ஒரு பெரும் பங்கு உள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்தின் மூலம், மத்திய அரசு மற்றும் மாகாண சபைகளினால் ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை மிகவும் பயனுள்ள வகையில் பயன்படுத்த எமக்கு வாய்ப்புக் கிடைக்கும்," எனவும் அவர் குறிப்பிட்டார்.
2026 ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திட்டம் ஒன்றைத் தயாரிப்பதெனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையின் மூலம் இந்நாட்டின் கடற்றொழில்துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்த அமைச்சு எதிர்பார்க்கின்றது.