தேசிய நீர்வாழ் சூழல் அமைப்பிற்கும், உள்ளூர் மீன் வளத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் ‘ஜெயன்ட் ஸ்னேக்ஹெட்’ (Giant Snakehead) எனும் ஆக்கிரமிப்பு வெளிநாட்டு மீன் இனத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக ஏற்பாடு செய்யப்பட்ட "தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025", சனிக்கிழமை (செப்டம்பர் 20) தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மிகவும் வெற்றிகரமாக நிறைவுற்றது.
கடற்றொழில் அமைச்சின் முழுமையான வழிகாட்டலின் கீழ், வடமேல் மாகாண சபையின் பங்களிப்புடன், ‘அங்லிங் பிரஜாவ ஸ்போர்ட் ஃபிஷிங் கிளப்’, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை (NAQDA), Clean Sri Lanka நிறுவனம் மற்றும் பிராந்திய மீனவர் சங்கங்கள் இணைந்து ஏற்பாடு செய்த இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில், நாட்டின் பல பாகங்களிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட தூண்டிலாளர்கள் (Anglers) கலந்துகொண்டனர். தென்னிந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கலந்துகொண்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர், கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள், இந்த பிரதான நோக்கத்தை தெளிவுபடுத்தினார்.
"அலங்கார மீன்களாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, பின்னர் அவற்றின் உரிமையாளர்களால் இயற்கை நீர்நிலைகளில் விடப்படும் ஆக்கிரமிப்பு மீன் இனங்களால் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பு குறித்து சமூகத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எமது பிரதான நோக்கமாகும். எமது சுற்றாடலில் இயற்கையான எதிரிகள் இல்லாத காரணத்தால், இந்த மீன்கள் வேகமாகப் பெருகி, எமது சுதேச மீன் வளத்தை அழித்து, மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்திற்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன," என அவர் வலியுறுத்தினார்.
இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, பின்வரும் நான்கு ஆக்கிரமிப்பு மீன் இனங்களை இறக்குமதி செய்தல், கொண்டு செல்லுதல், வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்வதைத் தடைசெய்யும் புதிய ஒழுங்குவிதிகளை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளது எனவும் அவர் இங்கு அறிவித்தார்.
பிரானா (Piranha) வகைகள்
நைப் ஃபிஷ் (Knife Fish)
அலிகேட்டர் கார் (Alligator Gar)
ரெட்லைன்/ஜெயன்ட் ஸ்னேக்ஹெட் (Redline/Giant Snakehead)
இந்தச் சட்டம், வர்த்தமானி வெளியிடப்பட்டு மூன்று மாத கால சலுகைக் காலத்தின் பின்னர் முழுமையாக நடைமுறைக்கு வரும் எனவும், பொழுதுபோக்கிற்காக அல்லது கண்காட்சி நோக்கங்களுக்காக இந்த மீன்களை வைத்திருக்கும் நபர்கள் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையிடம் (NAQDA) இருந்து விசேட அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் செயலாளர் மேலும் விளக்கினார்.
தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "இது வெறுமனே ஒரு பாதுகாப்பு நிகழ்ச்சி மட்டுமல்ல, இப்பகுதி மக்களுக்கு புதிய பொருளாதார வாய்ப்புகளைத் திறந்துவிடும் ஒரு முயற்சி. ‘விளையாட்டு மீன்பிடி’ (Sport Fishing) என்பதை சூழல்சார் சுற்றுலாத்துறையின் ஒரு அங்கமாக இப்பகுதியில் மேம்படுத்துவதன் மூலம், மீனவ சமூகத்திற்கும் கிராம மக்களுக்கும் ஒரு மேலதிக வருமான வழியை உருவாக்க முடியும்," எனக் குறிப்பிட்டார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பணப் பரிசுகள் வழங்கப்பட்டதுடன், தெதுரு ஓயா பகுதி மீனவ சமூகத்தை ஊக்குவிக்கும் முகமாக 15 மீன்பிடித் தூண்டில்கள் மற்றும் 03 ரீல்கள் உள்ளிட்ட பெறுமதியான மீன்பிடி உபகரணத் தொகுதிகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள், பொதுமக்கள் தமது வீடுகளில் வளர்க்கும் வெளிநாட்டு மீன் இனங்களை எக்காரணம் கொண்டும் இயற்கை நீர்நிலைகளில் விட வேண்டாம் என வலியுறுத்தினார். அவ்வாறு தொடர்ந்தும் பராமரிக்க முடியாத மீன்களை அதிகாரசபையிடம் மீள ஒப்படைப்பதற்கான விசேட திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த முன்மாதிரியான நிகழ்ச்சியினை, நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்த அமைச்சு எதிர்பார்த்துள்ளது.