en banner

Beruwela1"கடந்த காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த அரசியல் கலாசாரத்தை மாற்றி, அமைச்சுகள் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் யுகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது" - பிரதி அமைச்சர் ரத்ன கமகே

இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், பேருவளை மீன்பிடி துறைமுக வளாகத்தில் 76 மில்லியன் ரூபாய் முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்ட புதிய "படகு இறங்குதளம்" (Boat Launching Facility), கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரின் தலைமையில் நேற்று (11) முற்பகல் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

உள்நாட்டு படகு உற்பத்தித் துறையானது நாட்டிற்கு ஆண்டுதோறும் 53 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான ஏற்றுமதி வருமானத்தை ஈட்டித் தருகின்ற நிலையில், உற்பத்தி செய்யப்படும் பெரிய படகுகளை பாதுகாப்பாக கடலில் இறக்குவதில் இதுவரை இருந்து வந்த தொழில்நுட்பத் தடைகளை நீக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, இது வெறும் மீன்பிடி துறைமுக வசதி மட்டுமல்ல, நாட்டிற்குள் அந்நிய செலாவணியை உள்ளீர்க்கும் ஒரு புதிய பொருளாதாரப் பாதை என வலியுறுத்தினார்.

"கடந்த காலத்தில் படகுகளை உற்பத்தி செய்து வீதிகள் வழியாக கொண்டு செல்லும் போது, மின்சாரக் கம்பிகளுக்கு சேதம் ஏற்படுவது உள்ளிட்ட பெரும் தடைகளை உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டனர். இந்த இடத்திலேயே உற்பத்தி மற்றும் இறக்குதல் பணிகளை மேற்கொள்வதன் மூலம் அந்த செலவைக் குறைக்க முடியும். 2030 ஆம் ஆண்டளவில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்துவதே எமது இலக்காகும்" எனவும் அமைச்சர் கூறினார்.

கடற்றொழில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே இங்கு உரையாற்றுகையில், அமைச்சுகளுக்கு இடையே நிலவும் பரஸ்பர ஒத்துழைப்பே தற்போதைய அரசாங்கத்தின் வெற்றிக்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

"கடந்த காலத்தில் ஊழல் மற்றும் மோசடிகளை அடிப்படையாகக் கொண்டிருந்த அரசியல் கலாசாரத்தை நாங்கள் மாற்றியமைத்துள்ளோம். இன்று நாம் நாட்டிற்காக தனியார் தொழில்முயற்சியாளர்களின் நட்புத் தரப்பாகச் செயற்படுகிறோம். தற்போதுள்ள 300 மில்லியன் டொலர் கடற்றொழில் ஏற்றுமதி வருமானத்தை அடுத்த நான்கு ஆண்டுகளில் 600 மில்லியன் டொலராக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

எதிர்காலத்தில் 'ஸ்டீல் ஹல்' (Steel Hull) தொழில்நுட்பத்துடன் கூடிய படகுகளை உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்தத் திட்டத்தின் நிர்வாக மற்றும் பராமரிப்புப் பணிகள் இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்திடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதும் இதன்போது இடம்பெற்றது.

இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி, காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த பெரேரா, கைத்தொழில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, களுத்துறை மாவட்டச் செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பி.ஏ.பி. கபில பமுனுஆராச்சி உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் வர்த்தக சமூகத்தினர் பெருமளவில் கலந்துகொண்டனர்.

Beruwela3

Beruwela4

Beruwela5

Beruwela6

Beruwela7

Beruwela8

சமீபத்திய செய்திகள்

Youtube