en banner

WhatsApp Image 2026 05 14 at 20.52.14இலங்கை மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு இடையில் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், ஓமான் நாட்டின் உயர்மட்ட கைத்தொழில் தூதுக்குழுவிற்கும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (14) முற்பகல் அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றது

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் சார்பில் தூதுக்குழுவினரை வரவேற்ற அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச, நாட்டின் கடற்றொழில் துறையில் காணப்படும் நேரடி வெளிநாட்டு முதலீடுகள் (FDI), அரசாங்கங்களுக்கு இடையிலான பங்காண்மை (G2G) மற்றும் அரச-தனியார் பங்காண்மை (PPP) ஆகியவற்றுக்கான பரந்த வாய்ப்புகள் குறித்து விளக்கமளித்தார். தொழில்நுட்பம் மற்றும் துறைசார் அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கு அமைச்சு வெளிப்படையாக உள்ளதாகச் செயலாளர் இதன்போது வலியுறுத்தினார்.

இன்று காலை நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஓமான் தூதுக்குழுவினர் இலங்கையில் நிலவும் முதலீட்டுத் திறன்களை நேரடியாக ஆய்வு செய்வதற்காக விசேட கள விஜயங்களில் தற்போது ஈடுபட்டுள்ளனர். இன்று நாள் முழுவதும் முன்னெடுக்கப்படும் இந்த அவதானிப்பு விஜயங்களில் பின்வரும் முக்கிய துறைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன:

* கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் திருத்தப் பணிகள்: இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் (CFC) மற்றும் இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் சட்டரீதியான கூட்டுத்தாபனம் (CFHC) ஆகியவற்றின் கீழ் உள்ள கப்பல் கட்டும் தளங்களின் (Dockyards) திருத்தப் பணிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலை அபிவிருத்தி மையங்களை அவதானித்தல்.

* சீநோர் (Ceynor) கப்பல் கட்டும் தளம்: மொரிஷியஸ் நாட்டுக்காக சீநோர் நிறுவனத்தினால் தயாரிக்கப்படும் உயர்தரப் படகுகளைப் பார்வையிடுதல். இதன்போது எஃகு (Steel), அலுமினியம் மற்றும் HDPE படகுகள் மற்றும் மிதக்கும் வீடுகள் (Floating houses) திட்டங்களுக்கான கூட்டு ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்துக் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

* வலை உற்பத்தி: லுனுவிலையில் அமைந்துள்ள நோர்த் சீ (Northsea Ltd) நிறுவனம் ஊடாக உயர்தர மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்வதற்கான முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல்.

* இறால் வளர்ப்பு: நாட்டில் நிலவும் இறால் வளர்ப்புத் துறையில் சந்தைப் பரிமாற்றம் மற்றும் இறால் குஞ்சுகளை (Post-larvae) விநியோகிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்துக் கலந்துரையாடல்.

* மீன் பதப்படுத்துதல்: ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) அங்கீகாரம் பெற்ற மீன் பதப்படுத்தும் நிலையம் ஒன்றையும் தூதுக்குழுவினர் பார்வையிடவுள்ளனர். ஓமான் கைத்தொழில்களுடன் இணைந்து நாட்டின் பதப்படுத்தும் மற்றும் மீன் தகர அடைப்பு (Canning) கைத்தொழிலை மேம்படுத்துவது குறித்து இங்கு அவதானம் செலுத்தப்படும்.

மொரிஷியஸ் நாட்டிற்காக சீநோர் நிறுவனம் தயாரிக்கும் நவீன படகுகள், மிதக்கும் வீடுகள் திட்டம், வலை உற்பத்தி மற்றும் மீன் தகர அடைப்பு கைத்தொழில் ஆகியவற்றில் கூட்டு வர்த்தகங்களை ஆரம்பிப்பதில் தூதுக்குழுவினர் விசேட ஆர்வம் காட்டினர். இந்த விஜயத்தின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையில் கடற்றொழில் துறையில் வலுவான ஒத்துழைப்பு ஏற்படும் எனச் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித கமல் ஜினதாச நம்பிக்கை வெளியிட்டார்.

WhatsApp Image 2026 05 14 at 20.52.15

 

சமீபத்திய செய்திகள்

Youtube