ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) மற்றும் தென் கொரிய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட “வினைத்திறனான உயிரியல் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் ஊடாக ஸ்மார்ட் மற்றும் நிலையான நீரியல் வளர்ப்பு” (Smart and Sustainable Aquaculture) எனும் நான்கு வருட கால செயற்திட்டத்தின் நிறைவு விழா நேற்று (12) கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இங்கு உரையாற்றிய அமைச்சர், சர்வதேச சந்தையில் நிலவும் கடும் போட்டியை எதிர்கொள்வதற்கு இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீரியல் வளர்ப்புத் துறை விரைவாக நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“இறால் வளர்ப்பு என்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், அந்நியச் செலாவணி ஈட்டலுக்கும் பெரும் பங்களிப்பு வழங்கும் ஒரு துறையாகும். காலநிலை மாற்றங்கள் மற்றும் நோய்ப் பரவல் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், இந்தச் செயற்திட்டத்தின் ஊடாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் பாதுகாப்பு முறைமைகளைப் பயன்படுத்தி உயர்தரமான உற்பத்திகளை சர்வதேச சந்தைக்கு வழங்க எமது பண்ணையாளர்களுக்கு இப்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது. பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், புத்தாக்கங்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் அரசாங்கம் என்றும் அர்ப்பணிப்புடன் உள்ளது,” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இச்செயற்திட்டத்தின் கீழ் எட்டப்பட்ட முக்கிய சாதனையாக 'தேசிய இறால் கைத்தொழில் தகவல் அமைப்பு' (Shrimp Industry Information System - SIIS) நிறுவப்பட்டுள்ளது. இது ஒரு தொழில்நுட்பக் கருவி மாத்திரமன்றி, அரச நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முற்போக்கான சீர்திருத்தம் என அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச இதன்போது சுட்டிக்காட்டினார். 'சென்சர்' (Sensors) தொழில்நுட்பம் மூலம் வளர்ப்பு நிலங்களில் நீரின் தரத்தைக் கண்காணிக்கவும், நோய்ப் பரவல் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கைகளைப் பெறவும் இந்த டிஜிட்டல் அமைப்பு உதவுகிறது. அத்துடன், எதிர்காலத்தில் இந்தத் தொழில்நுட்பத்தை நண்டு வளர்ப்பு, கடல் பாசி மற்றும் அலங்கார மீன் வளர்ப்பு போன்ற ஏனைய துறைகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் செயலாளர் குறிப்பிட்டார்.
இச்செயற்திட்டத்தின் கீழ் சுமார் 128,000 அமெரிக்க டொலர் பெறுமதியான நவீன ஆய்வுகூட உபகரணங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகள் NAQDA நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 450 இறால் பண்ணையாளர்கள் மற்றும் 190 அரச அதிகாரிகளுக்கு இது தொடர்பான விசேட பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் இலங்கையிலுள்ள தென் கொரியத் தூதுவர் மேதகு மியோன் லீ (H.E. Miyon Lee), FAO வதிவிடப் பிரதிநிதி விம்லேந்திர ஷரன், NAQDA மற்றும் NARA நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.









