நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, கடலோரக் கடல் பகுதிகளில் காலநிலை சீரற்றதாகக் காணப்படலாம் என்பதால், கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும்போது மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், அனைத்து மீனவர்களும் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிவது கட்டாயமெனவும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த வலியுறுத்தியுள்ளார்.
இன்று (13) காலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அத்துடன் காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக புத்தளம், சிலாபம் முதல் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படலாம் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த:
"தற்போதைய நிலவரப்படி கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான தடையை விதிக்கவில்லை. இருப்பினும், கடலோரப் பகுதிகளில் சிறு படகுகள் மூலம் மீன்பிடியில் ஈடுபடுவோர் வானிலை அறிக்கைகள் குறித்துத் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்க வேண்டும். கடல் கொந்தளிப்பாகக் காணப்பட்டால், உடனடியாகப் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறோ அல்லது கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறோ கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக, கடலுக்குப் புறப்படுவது முதல், மீன்பிடியில் ஈடுபடும் நேரம் மற்றும் மீண்டும் பாதுகாப்பாகக் கரை திரும்பும் வரை முழுமையான காலப்பகுதியிலும் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிந்திருப்பது கட்டாயமாகும். எனினும், பலநாள் மீன்பிடிக் கலன்கள் வழமை போன்று துறைமுகங்களிலிருந்து வெளியேறவும் கரை திரும்பவும் முடியும்."
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றினால் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை அறிவிப்புகள் குறித்துத் தீவிர அவதானம் செலுத்தி, தமது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அனைத்து மீனவ சமூகத்தினரையும் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.





