en banner

WhatsApp Image 2026 05 07 at 12.47.34 1இலங்கை கடல் எல்லைக்குள் 32 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட விசேட கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு 'டாக்டர் பிரிட்ஜோப் நன்சன்' (Dr. Fridtjof Nansen) ஆராய்ச்சி கப்பல் மீண்டும் இலங்கை திரும்பியதை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர்  இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு துறைமுக பயணிகள் முனையத்தில் நடைபெற்றது.

நார்வே அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஆதரவுடன், கடற்றொழில் அமைச்சு மற்றும் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) இணைந்து இந்த ஆய்வை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) மீன் வளங்களை மதிப்பீடு செய்தல், கடல்சார் சூழல் தொகுதிகளைக் கண்காணித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை ஆய்வு செய்தல் ஆகியன இதன் பிரதான நோக்கங்களாகும்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிட்டதாவது:
"சமுத்திரம் என்பது இலங்கையர்களின் வாழ்வாதாரத்தின் அடிப்படையாகும். சமுத்திரத்தின் ஆழத்தில் மறைந்துள்ள இரகசியங்கள் இதுவரை நமக்கு மர்மமாகவே இருந்தன. இந்த ஆய்வுக்குழு கடந்த 32 நாட்களாக மேற்கொண்ட அர்ப்பணிப்பின் மூலம் எமக்கு எதிர்காலத்திற்கான ஒரு அறிவியல் 'வரைபடத்தை' உருவாக்கியுள்ளனர். நிலவும் சூழலியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், நீங்கள் வழங்கும் இந்த தரவுகள் மீனவ சமூகம் மற்றும் கடல் சூழலைப் பாதுகாப்பதற்கான சரியான கொள்கை முடிவுகளை எடுக்க எமக்குக் கிடைத்துள்ள மிக வலிமையான கருவியாகும்."

இங்கு உரையாற்றிய FAO வதிவிடப் பிரதிநிதி விமலேந்திர ஷரன், சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் ஊடாக 16 இலங்கை விஞ்ஞானிகளுக்கு குறிப்பாக இளம் பெண் விஞ்ஞானிகளுக்கும் சர்வதேச ரீதியிலான பயிற்சிகளை வழங்க முடிந்தமை ஒரு விசேட வெற்றியாகும் எனச் சுட்டிக்காட்டினார். உலகளாவிய ரீதியில் 90% மீன் வளம் ஏற்கனவே அதிகப்படியான நுகர்வால் அழிந்து வருவதை எச்சரித்த அவர், அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் கடற்றொழில் முகாமைத்துவத்தை முன்னெடுப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச, நாரா (NARA) தலைவர் சனத் ஹெட்டியாரச்சி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

WhatsApp Image 2026 05 07 at 12.47.26

WhatsApp Image 2026 05 07 at 12.47.28

WhatsApp Image 2026 05 07 at 12.47.33

WhatsApp Image 2026 05 07 at 12.47.34

WhatsApp Image 2026 05 07 at 12.47.36

WhatsApp Image 2026 05 07 at 12.47.39

Youtube