இலங்கையின் கடற்றொழில் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி (IUU Fishing) நடவடிக்கைகளைத் தடுத்தல் குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்தின் விசேட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஏப்ரல் 27 முதல் 30 வரை இலங்கையில் விசேட ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இவ்விசேட ஆய்வின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாட்டின் கடற்றொழில் துறையை சர்வதேச தரத்திற்கு அமையப் பேணுவதற்கு அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வலியுறுத்தினார். அதன் ஒரு முக்கிய கட்டமாக, புதிய கடற்றொழில் சட்டமூலத்தை (Fisheries Act) விரைவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெற்று அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது உறுதியளித்தார்.
கணக்காய்வின் இறுதி நாள் கூட்டத்தில் பங்கேற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே குறிப்பிடுகையில், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை ஒழிப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு குறித்து ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்குத் தெளிவுபடுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். கணக்காய்வுக் குழுவினால் வழங்கப்பட்ட ஒவ்வொரு அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகள் குறித்தும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும், அதன் மூலம் நாட்டின் கடற்றொழில் துறையை மிகவும் முறையான மற்றும் சரியான பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் கூறினார்.
இந்தக் கணக்காய்வு விஜயத்தின் போது, குறித்த பிரதிநிதிகள் குழுவினர் கலன் கண்காணிப்பு அலகு (VMS), மீன் ஏற்றுமதி நடைமுறைகள் மற்றும் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவுகளின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதோடு, திக்கோவிட்ட மற்றும் வெல்லமங்கர மீன்பிடித் துறைமுகங்களின் தகவல் அறிக்கையிடல் மற்றும் செயற்பாடுகளையும் ஆய்வு செய்தனர். குறிப்பாக, சர்வதேச கடல் எல்லைகளில் மீன்பிடிக்கும்போது பின்பற்றப்படும் சட்டக் கட்டமைப்பு மற்றும் தரவுகளைப் பதிவு செய்யும் முறைகளின் வினைத்திறன் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இலங்கையின் மொத்த Tuna மீன் ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதத்தை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளே கொள்வனவு செய்கின்றன. அத்துடன், மீன் ஏற்றுமதி வருமானத்தில் சுமார் 50 சதவீதத்திற்கு நெருக்கமான வருமானம் இச்சந்தையின் மூலமே ஈட்டப்படுகிறது. எனவே, இத்தகைய ஆய்வுகளும் அவற்றின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதும் இலங்கையின் கடற்றொழில் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மிக அவசியமானதாகும்.







