en banner

WhatsApp Image 2026 03 31 at 23.27.23 1இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே (Mr. Marc-André Franche) மற்றும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (30) அமைச்சில் நடைபெற்றது.

வட மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் கடற்றொழில் துறையின் நவீனமயமாக்கல் பணிகள் குறித்து அமைச்சர் இதன்போது விளக்கமளித்தார். அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்களும் இச்சந்திப்பில் கலந்துகொண்டார்.

கடற்றொழில் துறையின் அபிவிருத்தி குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், மயிலிட்டி மற்றும் குருநகர் மீன்பிடித் துறைமுகத் திட்டங்கள் குறித்து விசேடமாகச் சுட்டிக்காட்டினார். அதற்கமைய, கடந்த 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட மயிலிட்டி மீன்பிடித் துறைமுக மறுசீரமைப்புத் திட்டத்தின் முதற்கட்டத்திற்காக சுமார் 298 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் மீன் ஏல விற்பனை மண்டபம், நவீன குளிரூட்டப்பட்ட களஞ்சியசாலைகள், வலைகளைத் திருத்தும் நிலையங்கள் மற்றும் வானொலித் தொடர்பாடல் மையம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படுகின்றன. மேலும், உலக வங்கியின் முதற்கட்ட 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியின் கீழ் முன்னெடுக்கப்படும் குருநகர் மீன்பிடித் துறைமுக நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் மீன் உற்பத்திச் சங்கிலியை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார்.

அத்துடன் வடக்கின் ஏனைய அபிவிருத்திப் பணிகள் குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர், முல்லைத்தீவு நந்திக்கடல் ஏரிக்குக் குறுக்கே 1.4 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படும் புதிய வட்டுவாகல் பாலம் மற்றும் ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய "வடக்கு தென்னை முக்கோண" திட்டம் குறித்தும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் விவசாயத்திற்குத் தேவையான நீரைப் பாதுகாப்பதே என உறுதியளித்தார்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, வட மாகாணத்தில் வெற்றிடமாகக் காணப்படும் காணிகளைப் பயன்படுத்தி கைத்தொழில் வலயங்களை விரிவுபடுத்தக் கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இச்சந்திப்பின்போது காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணி விடுவிப்பு மற்றும் ஏனைய பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

WhatsApp Image 2026 03 31 at 23.27.22 1

WhatsApp Image 2026 03 31 at 23.27.23

WhatsApp Image 2026 03 31 at 23.27.22 2

WhatsApp Image 2026 03 31 at 23.27.22

சமீபத்திய செய்திகள்

Youtube