en banner

WhatsApp Image 2026 02 09 at 20.43.19கைவிடப்பட்ட படகுகளிலிருந்து பலமான செங்கற்களை உற்பத்தி செய்ய நவீன தொழில்நுட்பம் - பிரதி அமைச்சர் ரத்ன கமகே

நீண்ட காலமாக மீன்பிடித் துறைமுகங்கள், இறங்குதுறைகள் மற்றும் கரையோரங்களில் குவிந்துள்ள பைபர் கிளாஸ் ஒதுக்கப்பட்ட படகுகள் மற்றும் கழிவுகளை முறையான வகையில் முகாமைத்துவம் செய்வதற்காக, கடற்றொழில் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் பைபர் கிளாஸ் மீள்சுழற்சித் திட்டத்திற்கான இயந்திரங்களைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் இன்று (09) கடற்றொழில் அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது. 'Clean Sri Lanka' (தூய்மையான இலங்கை) நிதியத்தின் ஊடாக 56 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கலந்துகொண்ட கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்:
"நாடு முழுவதிலுமுள்ள மீன்பிடித் துறைமுகங்களில் 10,000 தொன்னுக்கும் அதிகமான பைபர் கிளாஸ் கழிவுகள் குவிந்துள்ளன. சுனாமிக்குப் பின்னர் எஞ்சிய படகுகள் மற்றும் நாளாந்தம் சேரும் சுமார் 20 தொன் அளவிலான கழிவுகள் சுற்றாடலுக்கும், கடற்றொழில் துறைக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். 'Clean Sri Lanka' வேலைத்திட்டத்தின் கீழ் நாம் இப்பிரச்சினைக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குகிறோம். எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் பேருவளை பிரதேசத்தில் இந்த மீள்சுழற்சி இயந்திரத்தை நிறுவி, இந்தக் கழிவுகளைப் பயனுள்ள ஒரு உற்பத்தியாக மாற்றுவதே எமது இலக்காகும்."

சீ-நோர் (Cey-Nor) மன்றத்தின் தலைவர் அஜித எதிரிசிங்க அவர்கள் விளக்கியதற்கமைய, மணிக்கு 500 கிலோகிராம் கொள்ளளவு கொண்ட இந்த நவீன இயந்திரத்தின் மூலம் பைபர் கிளாஸ் பாகங்கள் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு, தூளாக்கப்பட்டு, சீமெந்துடன் கலக்கப்பட்டு கட்டடக் கற்கள் (Block stones), நடைபாதை கற்கள் (Paving blocks) போன்றன உற்பத்தி செய்யப்படுகின்றன. மணலுக்குப் பதிலாக சுமார் 30% இந்த பைபர் தூளைப் பிரதியீடு செய்வதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் Block கற்கள், சாதாரண Block கற்களை விட எடையில் குறைந்தவை எனவும் வலிமையில் கூடியவை எனவும் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் ஜனாதிபதி மேலதிக செயலாளர் ('Clean Sri Lanka' வேலைத்திட்டம்) பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

சமீபத்திய செய்திகள்

Youtube