நட்டமடையும் நிறுவனத்தை, இலாபம் ஈட்டும் தேசியச் சொத்தாக மாற்றுவேன் என பிரதி அமைச்சர் ரத்ன கமகே உறுதியுரை
வரலாற்று ரீதியாக நட்டமடைந்து வந்த இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை (CFC) புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், அதன் 2026 ஆம் ஆண்டிற்கான வருடாந்த வேலைத்திட்டம் நேற்று (14) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. "Clean Sri Lanka" (தூய்மையான இலங்கை) தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இந்த மாற்றத்திற்கான ஆண்டின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளுடன் மீன்பிடிக் கூட்டுத்தாபன வளாகத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர், புதிய மூலோபாயத் திட்டத்தை மீளாய்வு செய்தார். நிறுவனத்திற்கு ஒரு புதிய ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், கூட்டுத்தாபனத்தின் கட்டடங்கள் மற்றும் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பாரிய சிரமதானத்துடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை நிலைப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நிதி ரீதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். "பல வருடங்களாக, ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) மற்றும் பணிக்கொடை (Gratuity) ஆகியவற்றிற்கான நிலுவைத் தொகைகள் குவிந்து, நட்டமடையும் ஒரு நிறுவனமாக மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஓரங்கட்டப்பட்டிருந்தது," என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார். "எனினும், அதிமேதகு ஜනාதிபதி அவர்களின் தலைமையின் கீழ், எமது அரசாங்கம் 2026 வரவு செலவுத் திட்டத்தில் இந்த வரலாற்று ரீதியான கடன்களைத் தீர்ப்பதற்குப் கணிசமான நிதியை ஒதுக்கி, கூட்டுத்தாபனம் முன்னோக்கிச் செல்வதற்கான ஒரு வலுவான பாதையை அமைத்துக் கொடுத்துள்ளது."
தெளிவான ஐந்தாண்டு தூரநோக்குடன், தேசிய பொருளாதாரத்தின் பிரதான பங்காளியாக மாறுவதற்கு, மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஒரு பாரிய மறுசீரமைப்புக்குத் தயாராக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த மாற்றத்தின் பிரதான தூண்கள்:
1. மீன் கொள்வனவை அதிகரித்தல்: உள்ளூர் மீனவர்களுக்கு நிலையான மற்றும் நியாயமான சந்தையை உருவாக்கி, தற்போது 1% மட்டத்தில் உள்ள மீன் கொள்வனவு சந்தைப் பங்கை, படிப்படியாக உகந்த மட்டம் வரை அதிகரித்தல்.
2. நவீனமயமாக்கல்: புதிய குளிரூட்டல் தீர்வுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் விநியோக மற்றும் விற்பனை வலையமைப்புகளை முறைப்படுத்தல்.
3. சந்தை விஸ்தரிப்பு: உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளை இலக்காகக் கொண்ட மூலோபாய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்.
4. முழுமையாக 'சுத்திகரித்தல்': பௌதீக ரீதியான தூய்மைக்கு அப்பால், வினைத்திறனான நிதி மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவத்திற்காக நிறுவன கலாசாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தல்.
"2026 ஆம் ஆண்டு, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் வரலாற்றில் ஒரு விசேட, மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என நாம் நம்புகிறோம்," என பிரதி அமைச்சர் இறுதியாகத் தெரிவித்தார். "எமது மீனவ சமூகத்திற்கு நிவாரணத்தையும் அபிமானத்தையும் பெற்றுக்கொடுக்கும், நுகர்வோருக்கு நியாயமான விலையில் தரமான மீன்களை வழங்கும் மற்றும் தேசிய பொருளாதாரத்திற்கு நேரடிப் பங்களிப்பை வழங்கும் ஒரு நிறுவனமாக இதனை மாற்றுவதே எமது நோக்கமாகும்." என மேலும் தெரிவித்தார்.
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் திரு. நவ்ரஸ் மற்றும் பணிப்பாளர் சபையினரால் தயாரிக்கப்பட்ட இந்த புதிய திட்டம், கூட்டுத்தாபனத்தை இலாபம் ஈட்டும் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கான ஒரு உறுதியான முயற்சியைப் பறைசாற்றுகிறது.





