en banner

WhatsApp Image 2026 01 14 at 14.33.07

இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தி அலுவலகத்துக்கு இன்று (14.01.2025) விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்து, அரசியல், பொருளாதார மற்றும் அபிவிருத்தி சார்ந்த முக்கிய கலந்துரையாடல்களை நடத்தினார்.

இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது  கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

இதன்போது, தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபை உறுப்பினர் சு.கபிலன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதுவரின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசு வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். பேரிடர் காலங்களில் அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி மக்களுக்காக துணைநிற்பதே உண்மையான சர்வதேச நட்பின் அடையாளம் என அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தற்போது நாட்டை மீண்டெழ வைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றியும் விவரித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் உருவாகி வரும் புதிய அரசியல் பண்பாடு, வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்கான பொறுப்புணர்வு ஆகியவற்றையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

குறிப்பாக அரசாங்கம்மீது வடக்கு மக்கள் வைத்துள்ள நம்பிக்கை, அந்த நம்பிக்கைக்கு துரோகம் இழைக்காத வகையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் தூதுவருக்கு அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் கீழ் வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் அமைச்சர் தெளிவாக எடுத்துரைத்தார்.

போருக்குப் பிந்தைய மீட்சி அரசியலை வெறும் வாக்குறுதிகளாக அல்லாமல், செயற்பாடுகளாக மாற்றும் உறுதியான அரசியல் தீர்மானங்களே இன்று வடக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்திகளுக்குப் பின்னணி என அவர் குறிப்பிட்டார்.  குறிப்பாக மீன்வளம், கடற்றொழில், நீரியல் வளங்கள் பாதுகாப்பு, கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் ஆகியவை வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன என விளக்கினார்.

மேலும், வடக்கு மாகாணத்தில் உருவாக்கப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் வெறும் முதலீட்டுக்கான நிலங்களாக மட்டுமல்லாது, வேலைவாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் பிராந்திய பொருளாதார சமநிலையை உருவாக்கும்  திட்டங்களாகும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

இந்த முதலீட்டு முயற்சிகளுக்கு அவுஸ்திரேலியாவின் ஒத்துழைப்பும் அவசியம்.குறிப்பாக ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள் இங்கு வரவேண்டும். அவுஸ்திரேலியாவில் எமது புலம்பெயர் உறவினர்கள் வாழ்கின்றனர். எனவே, அவர்களின் பங்களிப்பையும் பெற்றுதருவதற்குரிய துணையாக தூதுவர் செயல்பட வேண்டும் என அமைச்சர் கோரிக்கை வீடுத்தார்.

அதேபோல், அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தாய்நாட்டின் அபிவிருத்தியில் நேரடியாகப் பங்கெடுக்க வேண்டும் என அமைச்சர்   அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு இலங்கையர்களின் முதலீடுகள், குறிப்பாக வடக்கு மாகாணத்தில், தேசிய நல்லிணக்கம், பொருளாதார சமத்துவம் மற்றும் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் முக்கிய சக்தியாக அமையும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களைப் போல அல்லாமல், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் இலங்கையில் பாதுகாப்பு உத்தரவாதம் உறுதியாக நிறுவப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புலம்பெயர் தமிழர்களும் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் எந்தவிதத் தயக்கமுமின்றி இலங்கைக்கு வரவும், முதலீடுகளில் ஈடுபடவும் முழுமையான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

தெற்கில் எவ்வாறு இனவாத சக்திகள் செயல்பட்டு வருகின்றனவோ, அதேபோன்று வடக்கிலும் சில இனவாத சக்திகள் செயற்படுகின்றன. இச்சக்திகள் மக்களின் உண்மையான தேவைகளைப் புறக்கணித்து, அபிவிருத்தி பணிகளை தடைசெய்யும் நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றன என்பதையும் அமைச்சர் எடுத்து காட்டினார்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி ஊழலற்ற அரசாங்கமாக உருவெடுத்துவருவது தெளிவாகப் பிரதிபலிப்பதாக அவுஸ்திரேலிய தூதுவர் தெரிவித்தார். வெளிப்படைத்தன்மை, சட்டத்தின் ஆட்சி மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படும் இந்நிர்வாக முறை, சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில், தம்மால் முடிந்த முழுமையான ஒத்துழைப்பை அவுஸ்திரேலியா வழங்கத் தயாராக இருப்பதாக தூதுவர் உறுதியளித்தார்.

குறிப்பாக, வடக்கில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள், தொழில்துறை வளர்ச்சி, வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான பொருளாதார மேம்பாடு தொடர்பில் ஆழமாக ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்தார். வடக்கின் அபிவிருத்தி முயற்சிகள் அரசியல் ஸ்திரத்தன்மையுடனும் தெளிவான கொள்கை வழிநடத்தலுடனும் முன்னெடுக்கப்படுவதை அவுஸ்திரேலியா வரவேற்பதாகவும் கூறினார்.   

இலங்கையில் இனவாதம் தோற்கடிக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வில் பல தசாப்தங்களாக பதிந்துள்ள வலியும், வடுக்களும் ஆற வேண்டும். வெறும் சமாதானக் கோஷங்களால் அல்ல, நீதியும் சமத்துவமும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான நல்லிணக்கம் இந்நாட்டில் பிறக்க வேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பாகவும் எனவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

WhatsApp Image 2026 01 14 at 14.33.11

WhatsApp Image 2026 01 14 at 14.33.13

WhatsApp Image 2026 01 14 at 14.33.14

சமீபத்திய செய்திகள்

Youtube