
அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட இலங்கையின் கடற்றொழில் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்வது குறித்து, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு மெத்யூ டக்வொர்த் அவர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர், கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சீரற்ற காலநிலையால் கடற்றொழில்துறைக்கு ஏற்பட்ட பாரிய பாதிப்புகள் குறித்து அமைச்சர் சந்திரசேகர் அவர்கள் இங்கு விரிவாக விளக்கமளித்தார். குறிப்பாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள சிறு பரிமாண மீனவ சமூகத்திற்கு ஏற்பட்ட பாதிப்பு, சேதமடைந்த வலைகள் மற்றும் உபகரணங்கள், அத்துடன் முழுமையாக அல்லது பகுதியளவில் சேதமடைந்த படகுகள் குறித்தும் அவர் கவனம் செலுத்தினார்.
அதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர், தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவிகளை வழங்கக்கூடிய அனைத்து வழிகள் குறித்தும் அவுஸ்திரேலிய அரசாங்கம் ஆராயும் என உறுதியளித்தார்.
இதைத் தவிர, அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நன்கொடையாக கடற்றொழில் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட படகுகள் கண்காணிப்பு அமைப்பின் (Vessel Monitoring System - VMS) பேண்தகு நிலைத்தன்மை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. கடற்றொழில் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு மிகவும் முக்கியமான இந்த அமைப்பை வழங்கியமை குறித்து அமைச்சர் அவர்கள் அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குத் தனது நன்றிகளைத் தெரிவித்தார். அத்திட்டத்திற்கான அவுஸ்திரேலியாவின் அர்ப்பணிப்பை மீள உறுதிப்படுத்திய உயர்ஸ்தானிகர் டக்வொர்த் அவர்கள், அந்த அமைப்பின் தொடர்ச்சியான மற்றும் பேண்தகு செயற்பாட்டை உறுதி செய்வதற்காக மேலதிக ஆதரவை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதாகத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் பின்னர், உயர்ஸ்தானிகர் மற்றும் முதல் செயலாளர் ஆகியோர், கடற்றொழில் திணைக்களத்தில் அமைந்துள்ள படகுகள் கண்காணிப்பு அமைப்புப் பிரிவிற்குச் சென்று, அதன் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டனர்.
இந்த சந்திப்பு மிகவும் சுமுகமாக நிறைவடைந்ததுடன், இது இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி, கடற்றொழில் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது.








