en banner

WhatsApp Image 2025 12 23 at 22.28.55சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மீன்பிடித் துறைக்கு ஏற்பட்ட சேதத்தின் முதற்கட்ட மதிப்பீடு 7,649 மில்லியன் ரூபாவைத் (765 கோடி ரூபா) தாண்டி உள்ளதாக கடற்றொழில் அமைச்சு (23.12.2025) அறிவித்துள்ளது. 

இதற்குப் பதிலளிக்கும் வகையில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள், துறையை மீளக் கட்டியெழுப்புவதற்காக உடனடி நிவாரணம் மற்றும் நீண்டகால உதவிகளை வழங்குவதற்கான விரிவான மீட்புத் திட்டமொன்றை அறிவித்துள்ளார்.

விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய அமைச்சர், அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து, ஏற்பட்ட அழிவின் விபரங்களை விளக்கினார். பிரதான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் வழிகளில் ஒன்றான நீர்வாழ் உயிரின வளர்ப்பு (Aquaculture) துறைக்கு 5,850 மில்லியன் ரூபா என்ற பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதுடன், இதில் பிரதானமாக அலங்கார மீன், இறால் மற்றும் கடலட்டை கைத்தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடல்சார் மீன்பிடித் துறையின் நட்டம் 1,799 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.
"எமது தேசம் பாரிய இயற்கை அனர்த்தத்திற்கு முகங்கொடுத்த போதிலும், எமது மக்களின், விசேடமாக மீன்பிடித் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் தளர்வற்ற மன உறுதியானது எமக்கு நம்பிக்கையைத் தருகின்றது," என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்தார். "இந்த அரசாங்கம் இழந்தவற்றை மீண்டும் பெற்றுக்கொடுப்பதற்கு மட்டுமல்லாது, இக்கைத்தொழிலை முன்னரை விடவும் பலமான, முன்னேற்றகரமான நிலைக்குக் கட்டியெழுப்புவதற்கும் அர்ப்பணிப்புடன் உள்ளது. எமது அமைச்சு வெளியிட்ட முன்னெச்சரிக்கைகள், இதைவிடப் பாரிய உயிர்ச் சேதத்தைத் தவிர்ப்பதற்கு உதவியது" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், பின்வரும் விரிவான மீட்புத் திட்டம் அறிவிக்கப்பட்டது:

படகுகளைப் மீள்உருவாக்குதல் மற்றும் திருத்துதல்:
முழுமையாக அழிவடைந்த பலநாள் மற்றும் ஒருநாள் (I-Day) படகுகள் 13இற்கு, அவர்களுக்குரிய காப்புறுதி நட்டஈட்டுக்கு மேலதிகமாக, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குறைந்த வட்டி கடன் திட்டங்களுக்கு அவர்களை வழிப்படுத்தி, தாம் விரும்பிய இடத்தில் புதிய படகொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.

முழுமையாக அழிவடைந்த ஏனைய அனைத்து கடல்சார் படகுகளுக்கும், காப்புறுதி நட்டஈட்டுத் தொகையை சீ-நோர் (Cey-Nor) நிறுவனத்திற்கு மாற்றிய பின்னர், அந்நிறுவனத்தின் ஊடாக புதிய படகொன்றைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பகுதியளவில் சேதமடைந்த அனைத்து படகுகளும் (கடல் மற்றும் நன்னீர்), அந்தந்த இடங்களிலேயே சீ-நோர் நிறுவனத்தினால் அரசாங்கத்தின் செலவில் இலவசமாகத் திருத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி உபகரணங்களுக்கான உதவி:
வலைகள் அழிவடைந்த 1,205 கடல்சார் மீனவர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வரை பெறுமதியான பற்றுச்சீட்டும் (Voucher), நன்னீர் மீனவர்கள் 6,000 பேருக்கு அண்ணளவாக 75,000 ரூபா வரை பெறுமதியான உதவியும் வழங்கப்படவுள்ளது.

நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு கைகொடுத்தல்:
சிறியளவிலான இறால் பண்ணையாளர்களுக்கு முதற் போகத்திற்குத் தேவையான இறால் குஞ்சுகள் (PLs) இலவசமாக வழங்கப்படும். சேதமடைந்த 699 குளங்களின் மீன் வளத்தை, இரண்டு போகங்கள் வரை மீண்டும் ஸ்தாபிப்பதற்கும், அலங்கார மீன் உற்பத்தியாளர்களுக்கு புதிய தாய் மீன்களைப் பெற்றுக்கொடுப்பதற்கும் நெக்டா (NAQDA) நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்.

நிதி வசதிகள்:
விசேடமாகப் பாரிய சேதத்திற்குள்ளான, இறால் மற்றும் அலங்கார மீன் போன்ற ஏற்றுமதி கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ள நடுத்தர மற்றும் பாரியளவிலான வர்த்தகங்களை (பதப்படுத்தும் நிலையங்கள், ஐஸ் தொழிற்சாலைகள்) மீளக் கட்டியெழுப்புவதற்காக, அரச வங்கிகள் ஊடாக குறைந்த வட்டி கடன் திட்டங்களுக்கு வழிப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

சுனாமிக்குப் பின்னர் நன்னீர் மீன்பிடித் துறைக்கு ஏற்பட்ட பாரிய அழிவு இதுவென தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய சுட்டிக்காட்டினார். "நீர்வாழ் உயிரின வளர்ப்புத் துறைக்கு மாத்திரம் ஏற்பட்ட மொத்தச் சேதம் 585 கோடி ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 340 கோடி ரூபா அலங்கார மீன், இறால் மற்றும் கடலட்டை போன்ற ஏற்றுமதி வருமானத்தை ஈட்டிய கைத்தொழில்களுக்கு ஏற்பட்ட சேதமாகும். எஞ்சிய 240 கோடி ரூபா நட்டம் நன்னீர் மீன்பிடித் துறைக்கு ஏற்பட்டுள்ளமையானது, நாட்டின் உணவுப் பாதுகாப்புக்கும் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது," என அவர் குறிப்பிட்டார்.

ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் பதிலளிப்பு முறைமை குறித்து கருத்துத் தெரிவித்த கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, "நாங்கள் நான்கு கட்டங்களைக் கொண்ட முறையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கின்றோம். சேதங்களைக் குறைத்தல், தரவுகளைச் சேகரித்தல் மற்றும் மதிப்பிடுதலின் பின்னர், குறுகிய கால நிவாரணங்களை வழங்குதல் மற்றும் கைத்தொழிலை மீளக் கட்டியெழுப்புவதற்கான நீண்டகாலத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல் என்பன இதில் அடங்கும். கடல்சார் துறையில் மாத்திரம், 300 இற்கும் அதிகமான படகுகள் முழுமையாக அழிவடைந்துள்ளதுடன், 400 இற்கும் அதிகமானவை பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக ஆரம்பத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன," எனக் கூறினார்.

ஐவர் கொண்ட குழுவொன்றின் மூலம் அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளும் தற்போது உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், உதவிகளைப் பகிர்ந்தளித்தல் வெளிப்படைத்தன்மையுடனும் துரிதமாகவும் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச உறுதிப்படுத்தினார். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு, எதிர்காலத்திற்காக மிகவும் பலமான மற்றும் தாக்குப் பிடிக்கக்கூடிய மீன்பிடித் துறையொன்றைக் கட்டியெழுப்புவதற்கு அமைச்சு முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டோர்:

கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் - அமைச்சர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு

கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாச அவர்கள் - செயலாளர்,
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு

திரு. சுசந்த கஹவத்த - பணிப்பாளர் நாயகம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம்

திரு. கித்சிறி தர்மப்பிரிய - தலைவர், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA)

WhatsApp Image 2025 12 23 at 22.28.56

WhatsApp Image 2025 12 23 at 22.28.57

WhatsApp Image 2025 12 23 at 22.28.57 1

 

சமீபத்திய செய்திகள்

Youtube