en banner

 DSC1773இலங்கையின் கடற்றொழில் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புத் தொழில்துறையை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில், "Aqua Planet Sri Lanka 2025" (International Aquatic Expo) எனும் மாபெரும் கண்காட்சி தொடர்பாக கடற்றொழில் அமைச்சு நேற்று (16) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

உலக கடற்றொழில் தினத்திற்கு இணையாக, 2025 நவம்பர் மாதம் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று தினங்களில் கொழும்பு தாமரைக் கோபுர வளாகத்தில் இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இந்த தேசிய நிகழ்ச்சியினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) தலைவர் திரு. கித்சிறி தர்மப்பிரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சந்திரசேகர் அவர்கள், கடந்த காலங்களில் பெரும் சவால்களை எதிர்கொண்ட கடற்றொழில்துறையை மீளக் கட்டியெழுப்ப அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். "எமது அரசாங்கம் பொறுப்பேற்றபோது, ஆயிரக்கணக்கான படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு, முழு கடற்றொழில் துறையும் வீழ்ச்சியடைந்திருந்தது. ஆனால், ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் தலையிட்டு, எரிபொருள் மானியம் வழங்கி, அந்தப் படகுகளை மீண்டும் கடலுக்குச் செலுத்தி இந்தத் தொழில்துறைக்கு புத்துயிர் அளித்துள்ளோம். எமது இறுதி இலக்கு, இலங்கையை ஒரு பிராந்திய கடற்றொழில் மையமாக (Hub) மாற்றுவதாகும். 'Aqua Planet 2025' என்பது, சிறிய மீனவர் முதல் பெரிய ஏற்றுமதியாளர் வரை அனைவருக்கும் திறந்த ஒரு மேடையாகும். இதன் மூலம், எமது நாட்டின் திறனை உலக சமூகத்திற்குக் வெளிப்படுத்தி, அந்த இலக்கை அடைவதற்கான அடிப்படை அத்திவாரத்தை நாம் இடுகின்றோம்," என அவர் குறிப்பிட்டார்.

கண்காட்சியின் நிகழ்ச்சிகள் குறித்து விபரித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள், "இந்த மாபெரும் கண்காட்சி இரண்டு பிரதான பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒன்று, நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நெறிப்படுத்தப்படும் அலங்கார மீன்கள் பிரிவு, மற்றையது கடற்றொழில் திணைக்களத்தினால் நெறிப்படுத்தப்படும் முழுமையான கடற்றொழில்துறையை உள்ளடக்கிய பிரிவு. இதற்கு இணையாக, ஒரு நினைவு முத்திரை வெளியீடு, வங்காள விரிகுடா திட்டத்தின் அரசுகளுக்கிடையிலான அமைப்பின் (BOBP-IGO) சர்வதேச செயலமர்வு, மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை அறிமுகப்படுத்தும் விசேட அரங்கு போன்றவற்றையும் நாம் ஏற்பாடு செய்துள்ளோம்," எனத் தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய அவர்கள், "இந்தக் கண்காட்சி ஒரு நீண்ட பயணத்தின் ஆரம்பமாகும். 'ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மீன் தொட்டி' போன்ற எண்ணக்கருக்கள் மூலம் பாடசாலை மாணவர்கள் முதல் அனைவரையும் விழிப்புணர்வூட்டி, எமது அலங்கார மீன்களின் ஏற்றுமதி வருமானத்தை இரட்டிப்பாக்கவும், 'இலங்கை அலங்கார மீன்கள்' என்பதை ஒரு உலகளாவிய வர்த்தக நாமமாக மாற்றவும் நாம் எதிர்பார்க்கின்றோம்," எனக் குறிப்பிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கண்காட்சிக்கான உத்தியோகபூர்வ இலட்சினை மற்றும் இணையதளத்தை (www.aquaplanet.gov.lk) அங்குரார்ப்பணம் செய்து வைத்த அமைச்சு, இந்த தேசியப் பணிக்கு கைகோக்குமாறு பொதுமக்களுக்கு பகிரங்க அழைப்பு விடுத்தது.

சமீபத்திய செய்திகள்

Youtube