இந்நாட்டின் தேசிய நீரியல் சூழற்தொகுதியையும், உள்ளூர் மீன் வளத்தையும் கடுமையாக அச்சுறுத்தும், ஆக்கிரமிப்பு இயல்புடைய நான்கு வெளிநாட்டு மீன் இனங்களின் இறக்குமதி, வைத்திருத்தல், இனப்பெருக்கம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகியவற்றைத் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர், ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் இன்று (15) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அறிவித்தார்.
இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித கமல் ஜினதாச, தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த மற்றும் 'அங்லிங் பிரஜாவ ஸ்போர்ட் ஃபிஷிங்' சங்கத்தின் பிரதம போஷகர் திரு. பிரசன்ன பிரியகெலும் விக்ரமரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டார்: "இலங்கையின் தனித்துவமான நீரியல் சூழற்றொகுதியையும், தேசிய மீன் வளத்தையும் பாதுகாப்பது எமது அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். அதேவேளை, நாட்டிற்கு அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தரும் அலங்கார மீன் வளர்ப்புத் துறையை வலுப்படுத்துவதும் எமது நோக்கமாகும். இவ்விரு துறைகளையும் சமநிலையுடன் முகாமைத்துவம் செய்து, சூழலுக்குத் தீங்கு விளைவிக்கும் ஆக்கிரமிப்பு மீன் இனங்களைத் தடை செய்ய நாம் தீர்மானித்துள்ளோம். இது எக்காரணம் கொண்டும் அலங்கார மீன் வளர்ப்புத் துறைக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல, மாறாக அதனை ஒரு நிலையான வழியில் முன்னெடுப்பதற்காக எடுக்கப்பட்ட தீர்மானமாகும். அத்துடன், தெதுரு ஓயாவில் பரவிவரும் ஆக்கிரமிப்பு மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மக்கள் பங்குபற்றுதலுடன் மாபெரும் செயற்றிட்டம் ஒன்றையும் நாம் ஆரம்பிக்கவுள்ளோம்."
அமைச்சரின் தீர்மானத்திற்கான விஞ்ஞானப் பின்னணியை விளக்கிய அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச அவர்கள், பின்வரும் மீன் இனங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்தார்:
* பிரானா (Piranha) வகைகள்
* நைஃப் ஃபிஷ் (Knife Fish)
* அலிகேட்டர் கார் (Alligator Gar)
* ரெட்லைன் ஸ்னேக்ஹெட் அல்லது ஜயன்ட் ஸ்னேக்ஹெட் (Redline Snakehead/Giant Snakehead)
இந்த புதிய விதிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல், எதிர்வரும் சனிக்கிழமை (செப்டம்பர் 20) வெளியிடப்படவுள்ளது என்பது இங்கு விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த மீன்களை வளர்ப்போருக்கான விசேட அறிவித்தலும் வழிகாட்டலும்
அமைச்சரின் ஆலோசனையின் பேரில், தற்போது இந்த மீன்களை வளர்ப்போருக்காக மனிதாபிமான மற்றும் நடைமுறைச் சாத்தியமான செயற்றிட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய அவர்கள் விளக்கினார்: "புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன என்ற செய்தியையடுத்து, எக்காரணம் கொண்டும் அச்சமடைந்து உங்களிடம் உள்ள மீன்களை இயற்கை நீர்நிலைகளில் (குளங்கள், ஆறுகள், ஓடைகள்) விடுவிக்க வேண்டாம் என மிகவும் அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம். அதற்குப் பதிலாக, உங்களிடமுள்ள மீன்கள் தொடர்பான விபரங்களை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு (NAQDA) உடனடியாக அறியத் தாருங்கள். அந்த மீன்களை முகாமைத்துவம் செய்ய நாம் பின்வரும் வழிமுறைகளின் ஊடாக உங்களுக்கு உதவுவோம்:"
* ஏற்றுமதிக்கு வழிப்படுத்தல்: ஏற்றுமதியாளர்களுடன் தொடர்புகொண்டு, சட்டம் அமுலுக்கு வரும் முன்னர் அந்த மீன்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய சந்தர்ப்பம் வழங்கப்படும்.
* அதிகாரசபையிடம் ஒப்படைத்தல்: ஏற்றுமதி செய்ய வாய்ப்பில்லாத பட்சத்தில், அந்த மீன்களை அதிகாரசபையிடம் ஒப்படைக்கலாம். அவ்வாறு ஒப்படைக்கப்படும் மீன்கள் அழிக்கப்படமாட்டாது, மாறாக அங்கீகரிக்கப்பட்ட கண்காட்சிக் கூடங்கள் போன்ற பொருத்தமான இடங்களில் அவற்றின் ஆயுட்காலம் முடியும் வரை பராமரிக்கப்படும்.
* விசேட அனுமதிப்பத்திரத்தின் கீழ் வைத்திருத்தல்: மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில், ஒரு பொழுதுபோக்காக இந்த மீன்களைத் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பும் நபர்களுக்கு, ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டு அனுமதிப்பத்திரம் வழங்கும் சாத்தியம் குறித்தும் ஆராயப்படும்.
"நீங்கள் அன்புடன் வளர்த்த இந்த உயிரினங்களிடமிருந்து உங்களுக்கோ நாட்டுக்கோ பாதிப்பு ஏற்படாத வகையில் பிரிவதற்கு நாங்கள் உதவுவோம். எனவே, பதற்றமடையாமல் எமக்கு அறியத் தருமாறு மீண்டும் கேட்டுக்கொள்கிறோம்," என அவர் மேலும் குறிப்பிட்டார்.
‘தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025’ பாதுகாப்பு நடவடிக்கை தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் கடந்த இரண்டு வருடங்களில் மிக வேகமாகப் பரவியுள்ள ‘ஜயன்ட் ஸ்னேக்ஹெட்’ மீன்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், "தெதுரு ஓயா மீன்பிடிப் போட்டி 2025" எனும் பெயரில் விசேட மீன்பிடிப் போட்டியும் பாதுகாப்புச் செயற்றிட்டமும் எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி சனிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செயற்றிட்டம், கடற்றொழில் அமைச்சின் பூரண வழிகாட்டலின் கீழ், ‘அங்லிங் பிரஜாவ ஸ்போர்ட் ஃபிஷிங் கிளப்’ மற்றும் அப்பிரதேச மீனவ சங்கங்களின் நேரடிப் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படுகின்றது.
'அங்லிங் பிரஜாவ' சங்கத்தின் பிரதம போஷகர் திரு. பிரசன்ன பிரியகெலும் விக்ரமரத்ன குறிப்பிடுகையில், இந்தப் போட்டி நிகழ்வின் மூலம் ஒரே நாளில் பெருமளவிலான ஆக்கிரமிப்பு மீன்களைச் சூழலிலிருந்து அகற்ற முடியும் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வின் மூலம் ஆக்கிரமிப்பு மீன்களை அகற்றுவது மற்றும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அப்பிரதேச மீனவ சமூகத்தை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும். அதன்படி, போட்டியில் பங்குபற்றுவோறுக்கு பணப் பரிசுகள் வழங்கப்படும் அதேவேளை, தெதுரு ஓயா பகுதி மீனவ சமூகத்தினருக்கென பிரத்தியேகமாக 15 Fishing Rods, 3 தூண்டில் சுழற்சிகளும் (Reels) அடங்கிய பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன.