இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும். இது பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் இருந்ததாகவும், இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளூர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.