புத்தளம் மாவட்டத்தில் கடற்றொழில் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதியமைச்சர் திரு. ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இரண்டாவது மாவட்ட மீனவர் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று (11) புத்தளம் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக குமார, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான் மற்றும் மொஹமட் பைசால் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் பெருமளவில் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதியமைச்சர் ரத்ன கமகே, கடற்றொழில் சமூகத்தினருக்கு வழங்கப்படும் சேவைகளை வினைத்திறனாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். குறிப்பாக, புத்தளம் மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் கடலோர அரிப்பைத் தடுப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குப் பணிப்புரை விடுத்த அவர், கடற்றொழில் துறையின் முன்னேற்றத்திற்கு வனஜீவராசிகள் திணைக்களத்தின் ஒத்துழைப்பும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.
கலந்துரையாடலின் முக்கிய தீர்மானங்கள் மற்றும் முன்னேற்றங்கள்:
மீனவ துறைமுக அபிவிருத்தி முன்னேற்றம் மற்றும் புதிய முன்மொழிவுகள்:
வெல்லமங்கர கடற்றொழில் துறைமுகத்தின் வசதிகளை மேம்படுத்தும் வகையில் சிறிய இறங்குதுறைகளை (Finger jetties) அமைப்பதற்கான முன்மொழிவுகளை 2027 நிதி ஒதுக்கீட்டின் கீழ் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சிலாபம் முகத்துவாரம் மூடப்படும் பிரச்சினை மற்றும் கற்பிட்டி துறைமுகத்தின் குறைபாடுகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதற்கு மேலதிகமாக, அனைத்து நங்கூரமிடும் தளங்களையும் அளவீடு செய்து வர்த்தமானியில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளைக் கடற்றொழில் திணைக்களம் தற்போதும் மேற்கொண்டு வருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அனர்த்த மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல்:
'திட்வா' சூறாவளியினால் சிலாபம் துறைமுகம் மற்றும் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கு ஏற்பட்ட சேதங்களைப் புனரமைக்கும் பணிகள் சீ-நோர் (C-Nor) மற்றும் கடற்றொழில் திணைக்களத்தினால் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டது.
வடமேல் மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் புத்தளம் மாவட்டச் செயலாளர் ஆகியோரும் இங்கு உரையாற்றியதுடன், கடலில் பிளாஸ்டிக் மாசடைவதைக் குறைப்பதற்கான தேசிய ரீதியிலான தேவை குறித்தும் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.









