சிலாபம் மீன்பிடித் துறைமுகத்தின் நிலப் பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் விற்பனைக்கு 15 கடைகள் சிலாபம் நகரத்தில் மீனவ சங்கத்துக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வழங்கும் வைபவம் 2023.11.17ஆந் திகதி கடற்றொழில் அமைச்சில் நடைபெற்றது.
சிலாபம் நகரம் சார்ந்துள்ள கிராமிய மீனவ அமைப்பு மற்றும் கூட்டுறவு மீனவ சங்கத்தினால் கடற்றொழில் அமைச்சருக்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இக்கடைகள் விலைகோரலின் அடிப்படையில் இந்த சங்கங்களுக்கு பராமரிப்பதற்கு அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது.
இங்கு கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இக்கடைகளைப் பெறும் மீனவ சங்கத்தினால் அவற்றை மிக சுத்தமாக வைத்திருக்க வேண்டுமெனவும் அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
சிலாபம் நகரசபையின் கீழ் இயங்கும் சிலாபம் பொது சந்தை தொகுதியில் மீன் சந்தை மிகவும் அசுத்தமாக இருப்பதாகவும், இதனால் சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சிலாபம் நகரசபை இதில் சிறிதும் அக்கறை காட்டாமல் இருப்பது வியப்பளிக்கின்றது எனத் தெரிவித்தார். இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மீன் சந்தைக் கடைகளை மிகச் சிறப்பாகவும், சுத்தமாக பராமரிக்கவும், மக்களுக்கு சுத்தமான மீன் உணவுக்கு வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டுமெனவும், இந்த விற்பனை கடைகளை தனி நபர்களுக்கு வரி செலுத்தாமல் சங்கங்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய சங்கங்கள் தங்களது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவார்களென நம்புவதாகவும் தெரிவித்தார்.
இங்கு இந்த சங்கத்துடன் நீண்ட நேரம் கலந்துரையாடிய அமைச்சர் சிலாபம் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவூம் கலந்துரையாடினார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமைச்சின் செயலாளர்; திருமதி இந்து ரத்னாயக்க அவர்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
இலங்கை கடற்றொழில் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் திரு நிலங்க ஜயவர்தன மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் திரு சத்யானந்தன் ஆகியோர்கள் அடங்கலாக அதிகாரிகள் பலரும் சமூகமளித்திருந்தனர்.