அமெரிக்காவிற்கு மீன் மற்றும் மீன் சார்ந்த தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது அந்நாட்டின் "கடல்வாழ் பாலூட்டிகள் பாதுகாப்புச் சட்டத்தின்" (Marine Mammal Protection Act - MMPA) கீழ் விதிக்கப்பட்டிருந்த கடுமையான நிபந்தனைகளை இலங்கை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்துள்ளது.
இதன் விளைவாக, இலங்கையின் குறிப்பிட்ட நண்டுகளை (Blue Swimming Crab) அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கு நிலவிய தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் கீழ் இயங்கும் National Oceanic and Atmospheric Administration - NOAA, இலங்கையின் நண்டு பிடிமுறை மற்றும் அது தொடர்பான ஒழுங்குமுறைகள் அமெரிக்கத் தரத்திற்கு இணையானவை (Comparable in effectiveness) என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, 2025 நவம்பர் மாதம் அமெரிக்க நீதிமன்றத் தீர்ப்பொன்றின் காரணமாக இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. எனினும், கடற்றொழில் திணைக்களம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் ஏனைய தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிவியல் தரவுகள் மற்றும் ஆதாரங்களைக் கருத்திற்கொண்டு, NOAA நிறுவனம் தனது முடிவை மறுபரிசீலனை செய்து இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த அனுமதியின் விசேட அம்சங்கள் சில பின்வருமாறு:
1. ஏற்றுமதி உரிமை உறுதிப்படுத்தப்பட்டமை: அமெரிக்காவிற்கு மீன் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்வதற்கு அவசியமான 'ஒப்பீட்டு ரீதியிலான இணக்கப்பாட்டுச் சான்றிதழ்' (Comparability Finding) இதன் மூலம் இலங்கைக்குக் கிடைத்துள்ளது.
2. செல்லுபடியாகும் காலம்: இந்த உத்தியோகபூர்வ அனுமதி 2029 டிசம்பர் 31 ஆம் திகதி வரை செல்லுபடியாகும். அக்காலப்பகுதிக்குள் இலங்கையின் நண்டு ஏற்றுமதியை எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்க முடியும்.
3. சூழல் நட்புறவு மீன்பிடித் தொழில்: நண்டுகளைப் பிடிக்கும் போது டொல்பின்கள், திமிங்கிலங்கள் போன்ற கடல்வாழ் பாலூட்டிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் இலங்கை பின்பற்றும் நடைமுறைகள் சர்வதேச ரீதியாகப் பாராட்டப்பட்டுள்ளன.
இந்த வெற்றியானது நாட்டின் மீனவ சமூகத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், வெளிநாட்டு அந்நியச் செலாவணியை ஈட்டுவதற்கும் பெரும் பக்கபலமாக அமையும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.





