பங்களாதேஷ் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக பிரவேசித்த குற்றச்சாட்டில் சுமார் எட்டு மாதங்களாக அந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஆறு பேரும் நாளை (ஏப்ரல் 02) இலங்கையை வந்தடையவுள்ளனர்.
2025 ஆம் அண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதி 'சுது துவ 4' (IMULA 0138 PTM) எனும் நெடுநாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்கள், பங்களாதேஷ் கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டில் அந்த நாட்டு கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். பங்களாதேஷின் சட்டாகிராம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்த மீனவர்கள்:
டீ. ஏ.எச்.லசந்த (வயது 27)
டப்ளியூ. டி. டீ. அமித் குமார (வயது 40)
ஆர்.விஜய குமார (வயது 58)
கே.சுனில் மாக்கஸ் பெர்னாண்டோ (வயது 46)
ஆர். எம். லெஸ்லி (வயது 38)
எம். எஸ். பெர்னாண்டோ (வயது 23)
இந்த மீனவர்கள் கடந்த எட்டு மாதகாலமாக சிறையில் இருந்தமையால், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர். இந்நிலையில், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை சந்தித்த குடும்பத்தினர், மீனவர்களை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கமைய, கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வெளிவிவகார அமைச்சின் தலையீட்டுடன், பங்களாதேஷிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இராஜதந்திர முயற்சிகளின் பலனாக இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட இவர்கள், இன்று ஏப்ரல் 01ஆம் திகதி டாக்காவிலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில், நாளை (ஏப்ரல் 02) அதிகாலை 5 மணிக்கு இவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய உள்ளனர்.





