உடனடி சேத மதிப்பீட்டிற்கு உத்தரவு; புதிய தாய் மீன்கள் மற்றும் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தத் திட்டம்
இலங்கைக்கு வெளிநாட்டு அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பிரதான தொழில்துறைகளில் ஒன்றான அலங்கார மீன் தொழில்துறைக்கு, அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்டுள்ள பாரிய சேதங்கள் குறித்துக் கண்டறிவதற்காக, கடற்தொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நேற்று (03) பன்னல பகுதியில் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.
அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே.கோலித கமல் ஜினதாச மற்றும் தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய ஆகியோருடன் இணைந்து, பிரதி அமைச்சர் அவர்கள் 8 முதல் 12 அடி உயரம் வரை நீரில் மூழ்கியிருந்த பிரதான ஏற்றுமதி மையங்கள் சிலவற்றை நேரில் பார்வையிட்டார்.
இந்த வணிகங்கள் பலகோடி கணக்கான நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதுடன், ஏற்றுமதிக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த மீன் தொகுதிகளும் முழுமையாக அழிந்துள்ளன.
ஆரம்பகட்ட மதிப்பீடுகளின்படி, பன்னல மற்றும் கிரிஉல்ல பகுதிகளை மையமாகக்கொண்டு, நாட்டின் ஏற்றுமதி கட்டளைகளில் 50% இற்கும் அதிகமானவற்றை வழங்கும் 10 பிரதான ஏற்றுமதியாளர்கள் உட்பட, 1000 இற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த அழிவுகரமான சூழ்நிலையிலும், தமது சந்தைப்பங்கைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, இடிபாடுகளை அகற்றிவிட்டு ஏற்றுமதி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க முற்படும் வர்த்தகர்களின் மன உறுதியை பிரதி அமைச்சர் விசேடமாகப் பாராட்டினார்.
பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் குறித்து கருத்துரைத்த பிரதி அமைச்சர் கமகே, தொழில்துறையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் அசைக்க முடியாத ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
"அலங்கார மீன் தொழில்துறை என்பது ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும், நாட்டிற்கு டொலர்களை ஈட்டித் தரும் ஒரு அத்தியாவசியத் தொழில்துறையாகும். உங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முழுமையாக உறுதிபூண்டுள்ளது'' என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கண்காணிப்பு விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட முக்கிய மீட்சி உத்திகள்:
உடனடி சேத மதிப்பீடு: இலக்கு வைக்கப்பட்ட நிவாரணங்களை வழங்குவதற்காக, உத்தியோகபூர்வ சேத மதிப்பீட்டை மேற்கொண்டு அமைச்சுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நிதி உதவி: உடனடி நடைமுறை மூலதனத்தை வழங்குவதற்காக, சலுகைக்காலம் கொண்ட விசேட குறைந்த வட்டிக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்தல்.
புதிய தாய் மீன்களைப் பெற்றுக்கொள்ளல்: உற்பத்தியாளர்கள் புதிய வகைகளுடன் தமது இனப்பெருக்கத் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க ஏதுவாக, இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிலிருந்து உயர்தர புதிய தாய் மீன்களை (Broodstock) பெற்றுக்கொள்வதற்கு, அமைச்சின் செயலாளர் தூதுவர் மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளார்.
தமது வணிகங்களை மீண்டும் கட்டியெழுப்பி, இலங்கையின் அலங்கார மீன் ஏற்றுமதித் தொழில்துறையை மீண்டும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதி அமைச்சர் வர்த்தகர்களுக்கு உறுதியளித்தார்.










