en banner

WhatsApp Image 2025 10 29 at 14.48.02இரத்தினபுரி மாவட்டத்தின் நன்னீர் மற்றும் அலங்கார மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டமொன்றை கடற்றொழில் அமைச்சு முன்வைத்துள்ளது. எம்பிலிபிட்டிய பிரதேச செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட மீன்வள ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தின் பின்னரே இந்தத்திட்டம் அறிவிக்கப்பட்டது.

மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இதன்போது, நன்னீர் மற்றும் அலங்கார மீன்வளத் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர்கள், மீன் இனப்பெருக்கம் மற்றும் ஏற்றுமதியின் போது தாம் எதிர்கொள்ளும் பிரதான சவால்கள் குறித்து கருத்துக்களை முன்வைத்தனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர் கமகே, கடற்றொழில்த் துறையை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்ட விரிவான தேசிய மூலோபாயத்தை அறிவித்தார். வெறும் உதவிகளை வழங்குவதற்கு அப்பால் சென்று, நிலையான அபிவிருத்தி மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்பை இலக்காகக் கொண்ட முறையான தேசியத் திட்டத்தின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

"உற்பத்தியாளரின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டுச் செல்லும் காலம் முடிந்துவிட்டது. நாம் இப்போது எமது தொழில்துறையை, குறிப்பாக அலங்கார மீன்வளத் தொழிலை உலகத் தரத்திற்கு கொண்டு செல்லும் தேசியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறோம்," என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

"சர்வதேச அலங்கார மீன் சந்தையில் இலங்கையின் பங்களிப்பை தற்போதுள்ள 1% இற்கும் குறைவான மட்டத்தில் இருந்து 2% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும்." என குறிப்பிட்டார்.

பிரதி அமைச்சரினால் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள்

சர்வதேச ரீதியிலான ஊக்குவிப்பு : நவம்பர் மாதம் நடைபெறும் "Aqua Planet 2025 Sri Lanka" சர்வதேசக் கண்காட்சியின் ஊடாக வெளிநாட்டு கொள்வனவாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து, ஏற்றுமதியை அதிகரித்தல்.

ஒருங்கிணைந்த அபிவிருத்தி : கடற்றொழில் அமைச்சு, மாகாண கடற்றொழில் அமைச்சுகள் மற்றும் மஹாவலி அதிகாரசபை ஆகியவற்றை ஒன்றிணைத்து, வளங்களை வினைத்திறனாகப் பயன்படுத்தி வீண்விரயத்தைத் தவிர்க்கும் முறையான அபிவிருத்தித் திட்டங்களைச் செயற்படுத்தல்.

சமூக நலன்புரி மற்றும் அங்கீகாரம் : உலக கடற்றொழிலாளர் தினமான நவம்பர் 21ஆம் திகதி, அனைத்து மீனவ சமூகத்தினருக்கும் (கடல், நன்னீர், அலங்காரம்) புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல். அத்துடன் புதிய காப்புறுதித் திட்டம் மற்றும் கலாசாரத் திட்டங்கள் ஊடாக மீனவ சமூகத்தின் அந்தஸ்தை உயர்த்தி, அவர்களை "மீன்பிடித் தொழிலாளர்கள்" (Fisheries Technicians) என வலுப்படுத்துதல்.

கட்டமைப்பு அபிவிருத்தி : 2026 வரவு-செலவுத் திட்டத்தின் ஊடாக, மீன்பிடித் தொழிலின் வளர்ச்சிக்கு இணையாக மீனவக் கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்தல்.

கூட்டத்தின் பின்னர் உடவலவ நீர்த்தேக்கத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்கிருந்த மீனவ சமூகத்தின் பிரச்சினைகள் குறித்து நேரடியாகக் கலந்துரையாடியதுடன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து விரைவான மற்றும் நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சமீபத்திய செய்திகள்

Youtube