மொனராகலை மாவட்டத்தின் நன்னீர் மீன்பிடி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி தீர்வுகளை வழங்கும் நோக்கில், விசேட மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் கௌரவ ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நேற்று (30) மொனராகலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சரத் குமார, மொனராகலை மேலதிக மாவட்ட செயலாளர், ஊவா மாகாண விவசாய மற்றும் கடற்தொழில் அமைச்சின் செயலாளர், கடற்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளர், பிரதேச செயலாளர்கள், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (NAQDA) மற்றும் கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர்கள் உட்பட பொலிஸ், வனவிலங்கு, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் திணைக்களங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறிப்பாக வெஹெரகல மற்றும் சேனாநாயக்க சமுத்திரம் போன்ற பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் நடுத்தர அளவிலான குளங்களைச் சார்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதைத் தடுப்பது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.
தேசிய பூங்காக்களுக்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே மீன்பிடி நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதால், கிடைக்கும் மீன்கள் போதுமானதாக இல்லை என மீன்பிடி அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இரவு நேரங்களில் வலைகளை விரித்துவிட்டு, மறுநாள் காலை அவற்றை அகற்றுவதற்கு அனுமதி வழங்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தக் கால அவகாசத்தை நீடிப்பதற்கு தற்போதுள்ள சட்டக் கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும் எனவும், அதற்காக சுற்றுச்சூழல் அமைச்சு மற்றும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் கலந்துரையாட வேண்டும் எனவும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் விளக்கமளித்தார்.
அத்துடன், மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் அணுகு வீதிகளை அபிவிருத்தி செய்தல் போன்ற உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மாகாண அமைச்சின் நிதியொதுக்கீடுகளை வழங்குவதற்கு ஊவா மாகாண செயலாளர் இணக்கம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தேசிய மீனவர் ஒருமைப்பாட்டு இயக்கத்தின் செயலாளர் எல்.ஜி.அஜந்த குமார, மீன்பிடி சமூகத்தை 'உதவி பெறுபவர்கள்' என்ற மனநிலையிலிருந்து விடுவித்து, அவர்களை நிலையான மீன்பிடி தொழில்முனைவோராக மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
அத்துடன், வலுவான மீன்பிடி சங்கங்கள் ஊடாக இடைத்தரகர்களிடமிருந்து விடுபட்டு, பெறுமதி சேர்க்கப்பட்ட தயாரிப்புகளாகத் தங்களது உற்பத்திகளை சந்தைக்கு முன்வைப்பதற்கு அவர்களை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கலந்துரையாடலின் பின்னர், பிரதி அமைச்சர் வெஹெரகல நீர்த்தேக்கத்திற்குச் சென்று கடற்தொழில் சமூகத்தைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்து மேலும் கலந்துரையாடினார்.
மீன்பிடி வலைகளை விரிப்பதற்கான கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பாக வனவிலங்கு மற்றும் சுற்றுச்சூழல் அதிகாரிகளுடன் கலந்துரையாடி விரைவில் தீர்வுகாண நடவடிக்கை எடுப்பதாக அவர் அங்கு உறுதியளித்தார்.









