இறால் தொழில்துறையின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள தீர்மானமிக்க சவால்களுக்குத் தீர்வுகளைக் காண்பது மற்றும் அந்தத் துறையை தேசிய பொருளாதார இலக்குகளுடன் ஒருங்கிணைக்கும் நோக்கில், கடற்றொழில் அமைச்சு நேற்று (25) இறால் ஏற்றுமதியாளர்களுடன் உயர்மட்ட மூலோபாயக் கலந்துரையாடல் ஒன்றினை ஆரம்பித்தது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தக் கலந்தரையாடல், மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் நடைபெற்றது. இதில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் மற்றும் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பதிவுசெய்யப்பட்ட 699 இறால் பண்ணைகளில், தற்போது 300 பண்ணைகள் மாத்திரமே இயங்கு நிலையில் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய ஏற்றுமதியாளர்கள், உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி குறித்து தமது கவலையை வெளிப்படுத்தினர்.
உள்நாட்டு சந்தையில் நிலவும் அதிக விலை காரணமாக, ஏற்றுமதித் துறையிலிருந்து விநியோகம் விலகிச் செல்வது ஒரு முக்கியப் பிரச்சினையாக அடையாளம் காணப்பட்டது. தெளிவான தரவுகள் இல்லாமை மற்றும் குஞ்சுகளின் (Post-larvae) தட்டுப்பாடு ஆகியவையும் முக்கிய தடைகளாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, உற்பத்தியை அதிகரிப்பதற்காக அமைச்சினால் பல்துறை மூலோபாயத் திட்டமொன்று முன்வைக்கப்பட்டது. அரசாங்கத்திற்குச் சொந்தமான கஹந்தமோதர இனப்பெருக்க நிலையத்தை அபிவிருத்தி செய்தல், குஞ்சுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வுகாண ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) ஆலோசகர் ஒருவரின் உதவியைப் பெறுதல் மற்றும் செயலிழந்துள்ள பண்ணைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்க உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் புதிய கடன் திட்டங்களை அறிமுகப்படுத்துதல் போன்றவை இதில் அடங்குகின்றன.
அதேபோல், சந்தை தேவையினைப் பூர்த்தி செய்ய இறால்களை மீள் ஏற்றுமதி செய்வதற்கு தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்குதல், VAT வரி தொடர்பான நிதிப் பிரச்சினைகளைத் தீர்த்தல் மற்றும் இயற்கையாகப் பிடிக்கப்படும் மொனோடன் (Monodon) தாய் இறால்களைப் பயன்படுத்துவதற்கான தடையை மீள்பரிசீலனை செய்தல் போன்ற தொழில்துறையினரின் கோரிக்கைகளை ஆராய்வதற்கும் அமைச்சு இதன்போது இணக்கம் தெரிவித்தது.
உற்பத்திப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பிரதி அமைச்சர் ரத்ன கமகே இதன்போது மீண்டும் வலியுறுத்தினார். "எமது இலக்கு, 2026 ஆம் ஆண்டிற்காக உயர்ந்த ஒத்துழைப்புச் சூழலை உருவாக்கி, எமது இறால் ஏற்றுமதியாளர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு கணிசமான பங்களிப்பை வழங்கவும் அவர்களின் இலக்குகளை அடையவும் சந்தர்ப்பத்தை வழங்குவதாகும்" என அவர் தெரிவித்தார். இந்தச் செயல்முறையின் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ஒருமுறை கூடுவதற்கும் இதன்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.







