en banner

 DSC0261தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திச் செயல்பாட்டில் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், அதன் முற்போக்கு ஆய்வுக் கூட்டம் மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் செப்டம்பர் 16 ஆம் திகதி அந்த அதிகார சபையின் வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய, பணிப்பாளர் நாயகம், பணிப்பாளர்கள், உதவிப் பணிப்பாளர்கள், பிராந்தியப் பணிப்பாளர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் பணியாற்றும் விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

தவறான தரவுகளால் ஏற்பட்ட பின்னடைவு :

இந்தக் கூட்டத்தின் போது, நாட்டின் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து பிரதி அமைச்சர் விரிவாக ஆராய்ந்தார். கடந்த காலங்களில், குறிப்பாக 2024 ஆம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட மீன் உற்பத்தி தொடர்பான தரவுகளில் பாரிய குறைபாடுகளும் பிழைகளும் இருப்பது இதன்போது கண்டறியப்பட்டது. முறையான மேற்பார்வையின்றி தரவுகள் வழங்கப்பட்டமையே இதற்குக் காரணம் என அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, "கடந்த காலத் தவறுகளைத் திருத்திக்கொண்டு, நாட்டின் சனத்தொகைக்கு ஏற்ப மீன் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, இனிமேலாவது சரியான தரவுகள் மற்றும் சரியான வழிமுறைகளைப் பயன்படுத்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபை நேரடிப் பங்களிப்பை வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளும் தீர்வுகளும் : களத்தில் தாம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தனர்.

சட்டவிரோத மீன்பிடி : கரைவலை, மும்மடி வலை மற்றும் தங்குஸ் வலை போன்ற சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதால், நீர்நிலைகளில் விடப்படும் மீன் குஞ்சுகள் முறையாக வளர்வதற்கு முன்பே பிடிக்கப்படுவது பாரிய பிரச்சினையாக உள்ளது. இதற்குத் தீர்வாக, விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சுற்றிவளைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டது.

நீர்ப்பாசனத் திணைக்களத்துடனான ஒருங்கிணைப்பு : நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் சில குளங்களின் நீர்மட்டம் திடீரென மாற்றப்படுவது மீன் உற்பத்தியைப் பாதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அந்தத் திணைக்களத்துடன் கலந்துரையாடி நிலையான பொறிமுறையொன்றை உருவாக்க இணக்கம் காணப்பட்டது.

ஏனைய பிரச்சினைகள் : சில குளங்களுக்குப் போதுமான நீர் விநியோகம் இல்லாமை மற்றும் தோணிகளைப் பதிவு செய்யாமை போன்ற பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன. மகாவலி மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் போன்ற நிறுவனங்களுடன் சரியான ஒருங்கிணைப்புடன் செயற்படுவதன் மூலம் இப்பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மீனவர்களுக்கு நியாயமான விலை மற்றும் அதிகாரிகளின் நலன்புரி : மீனவர்கள் தமது உற்பத்திகளக்கு சரியான விலையைப் பெறாத சந்தர்ப்பங்களில், மீன்பிடிக் கூட்டுத்தாபனம் நேரடியாகத் தலையிட்டு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், அதிகாரிகள் எதிர்கொள்ளும் போக்குவரத்து அசௌகரியங்களுக்குத் தீர்வாக, வெளிநாட்டு நிதியுதவியின் கீழ் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன், அதிகாரிகளின் ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி, அவர்களின் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள அமைச்சு முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

 DSC0285

 DSC0268

 DSC0273

 DSC0276

சமீபத்திய செய்திகள்

Youtube