en banner

WhatsApp Image 2025 08 20 at 09.34.20ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) நிதிப் பங்களிப்பின் கீழ், அம்பாறை மாவட்டத்தின் நீரியல் வாழ் உயிரின வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட 'தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டம்' (Technical Cooperation Project) வெற்றிகரமாக நிறைவடைந்ததை முன்னிட்டு விசேட கருத்தரங்கொன்று நேற்று (2025 ஆகஸ்ட் 19) அம்பாறையில் நடைபெற்றது.

திட்டத்தின் பிரதிபலன் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதே இதன் பிரதான நோக்கமாகும்.

இந்தத் திட்டத்திற்காக FAO அமைப்பினால் 150,000 அமெரிக்க டொலர் நிதி செலவிடப்பட்டதுடன், அம்பாறை மாவட்டத்தின் நீரியல் வாழ் உயிரின வளர்ப்புத் துறையை உயர் மட்டத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் அதனை ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக மாற்றுவதே இதன் முதன்மை நோக்கமாகும்.

தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் (NAQDA) முன்வைக்கப்பட்ட 'வெவ அப்பே கம்ஹலை' (Wewa Ape Kamhalai) எனும் எண்ணக்கருவை நடைமுறை ரீதியாகப் பரிசோதிப்பதற்கும் அதனை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவியாக இருந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் பின்வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன :

இங்கினியாகலையில் அமைந்துள்ள நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி நிலையத்தின் சேதமடைந்த குளங்களைப் புனரமைத்தல்.

எக்கல்ஓயா சமூக மீன் இனப்பெருக்க நிலையத்திற்கு மின்சாரம், புதிய இனப்பெருக்க குளங்கள் மற்றும் மீன் முட்டைகளை அடைக்காக்கும் உபகரணங்களை (Hatchery Jars) வழங்குதல்.

ரஜவெவ மீனவ சமூகத்திற்கு மீன் தீவன உற்பத்தி இயந்திரம் (Feed Mill) ஒன்றினை வழங்குதல்.

தெரிவு செய்யப்பட்ட ஐந்து குளங்களுக்காக (பன்னல்கம, கொண்டுவட்டுவான, ஹிமிதுராவ, எக்கல்ஓயா, நாமல்ஓயா) 'வெவ அப்பே கம்ஹலை' திட்டத்தின் கீழ் வர்த்தகத் திட்டங்கள் மற்றும் மீன் குஞ்சுகளை இருப்பு வைக்கும் திட்டங்களை (Stocking Plans) தயாரித்தல்.

பேராசிரியர் உபாலி அமரசிங்கவின் பங்களிப்புடன் மீனவர்களுக்கு 'சிறந்த மீன்பிடி நடைமுறைகள்' (Good Fishery Practices) குறித்த பயிற்சிகளை வழங்குதல்.

தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்தினால் (NARA) இந்த குளங்கள் சார்ந்த சமூக-பொருளாதார ஆய்வொன்றை மேற்கொள்ளுதல்.

இந்தக் கருத்தரங்கில் அரச அதிகாரிகள், பல்வேறு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட குளங்கள் சார்ந்த மீனவ சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) தலைவர் கித்சிறி தர்மப்பிரிய, "இந்தத் திட்டத்தின் ஊடாகப் பெற்ற அனுபவங்கள் மிகவும் பெறுமதியானவை. 'வெவ அப்பே கம்ஹலை' என்ற எண்ணக்கருவை யதார்த்தமாக்க இந்தத் திட்டம் பெரும் பலத்தை அளித்துள்ளது.

எதிர்காலத்தில் இந்த அனுபவங்களின் அடிப்படையில், அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட செயற்திறன் குறிகாட்டிகளை (KPI) அறிமுகப்படுத்தி, சுயநிதி மீன்பிடி முகாமைத்துவம் மற்றும் நீரியல் வாழ் உயிரின வளர்ப்பை நாட்டில் நிறுவுவதே எமது நோக்கமாகும்" எனத் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட அறிவு மற்றும் அனுபவங்களை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்துவதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Image 2025 08 20 at 09.34.20 1

WhatsApp Image 2025 08 20 at 09.34.21

WhatsApp Image 2025 08 20 at 09.34.21 1

சமீபத்திய செய்திகள்

Youtube