பொலன்னறுவை மாவட்ட நன்னீர் மீனவ சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, இன்று (ஆகஸ்ட் 2) பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமொன்று நடைபெற்றது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நகர அபிவிருத்திப் பிரதி அமைச்சர் ரி.பி. சரத், மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பொலன்னறுவை மாவட்டச் செயலாளர் சுஜந்த ஏக்கநாயக்க அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பொலன்னறுவை மாவட்டத்தின் பிரதான ஐந்து நீர்த்தேக்கங்களான மின்னேரியா, கவுடுல்ல, கிரித்தலே, பராக்கிரம சமுத்திரம் மற்றும் மாதுரு ஓயா ஆகியவற்றைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாடு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் உள்ள சிரமங்கள், ஆக்கிரமிப்பு நீர்த்தாவரங்களின் வளர்ச்சியினால் நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு குறைதல், மீன் குஞ்சுகளை இருப்புச் செய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்திடமிருந்து அனுமதியைப் பெறுவதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் மீனவ சமூகத்தினர் கருத்துத் தெரிவித்தனர்.
இங்கு கருத்துத் தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்கள், இது நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ள நன்னீர் மீன்பிடி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தொடரின் ஆரம்பக் கூட்டம் எனக் குறிப்பிட்டார். மீன் உற்பத்தியை அதிகரித்தல், மீனவக் குடும்பங்களின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தல் மற்றும் மீன் உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டிற்குத் அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுத்தல் ஆகியன இவ்வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சுற்றாடல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் வனவிலங்கு பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் விசேட கூட்டமொன்றை நடத்த எதிர்பார்ப்பதாகப் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் இலங்கை பொலிஸ், இராணுவம், வனவிலங்கு மற்றும் வனப்பாதுகாப்புத் திணைக்களங்கள் உள்ளிட்ட ஏனைய அனைத்துத் தொடர்புடைய நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். மேலும், கடற்றொழில் அமைச்சின் மேலதிக செயலாளர் தம்மிக்க ரணதுங்க, மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜே.ஏ.கே. மார்க், பிரதி அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எச்.எஸ். ஹதுரசிங்க, தேசிய மீனவர் சம்மேளனத்தின் செயலாளர் எல்.ஜி. அஜந்த குமார, பொலன்னறுவை மாவட்டப் பிரதேசச் செயலாளர்கள், தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் (NAQDA) அதிகாரிகள், அரச நிறுவனத் தலைவர்கள் மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் மூலம், பொலன்னறுவை நன்னீர் மீன்பிடித் தொழிலை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்லவும், மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் துரித தீர்வுகளை வழங்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.









