மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் இன்று (ஜூலை 02) அமைச்சின் கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித்த கமல் ஜினதாச, இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பீ. ஏ. பி. கபில பமுணுஆரச்சி உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள், அனைத்து துறைமுகங்களின் முகாமையாளர்கள் மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மீன்பிடித் துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, செயற்பாட்டில் உள்ள 22 மீன்பிடித் துறைமுகங்களில் வசதிகள் போதியதாக இல்லாமை, அதிகபட்ச சேவைகள் கிடைக்கப்பெறாமை மற்றும் துறைமுகப் பகுதிகளில் நிலவும் டெங்கு பிரச்சினை என்பன குறித்து கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில், மீன்பிடித் துறைமுகங்களில் அத்தியாவசியப் பணிகளை நிறைவு செய்வதற்காக அமைச்சரவை அங்கீகாரத்துடன் 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் விசேடமாகத் தெரிவித்தார். இந்த நிதி மீன்பிடித் துறைமுகங்களின் முக்கியமான தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பில் துறைமுக முகாமையாளர்களிடம் அத்தியாவசிய விடயங்கள் குறித்து வினவப்பட்டது.
பெரும்பாலான மீன்பிடித் துறைமுகங்களில் எரிபொருள் விநியோகக் கட்டமைப்புக்களில், குறிப்பாக டீசல் மற்றும் மண்ணெண்ணெய் பம்புகளில் 17 பம்புகள் பற்றாக்குறையாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மீனவர்களுக்கு அத்தியாவசிய சேவையான எரிபொருள் விநியோகத்தை விரைவாக மேற்கொள்ளுமாறு பிரதி அமைச்சர் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு அறிவுறுத்தினார்.
இது தவிர, சில துறைமுகங்களில் மணல் திட்டுக்கள் உருவாகியுள்ளமையால் மீன்பிடிப் படகுகள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் சிரமங்கள் ஏற்படுவதாகக் குறிப்பிடப்பட்டது. இந்த மணல் திட்டுக்களை விரைவாக அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், சில துறைமுகங்களில் நீர் தாவரம் பரவியிருத்தல், கழிவுநீர் அகற்றும் முறைமைகளில் குறைபாடுகள் மற்றும் படகுத்துறைகளில் படகுகள் இணையும் போது சேதமடையாமல் தடுக்கும் பாதுகாப்பு டயர்கள் இல்லாததால் படகுகளுக்கு சேதம் ஏற்படும் சந்தர்ப்பங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இக்குறைபாடுகள் அனைத்தையும் விரைவாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான தொடர்பாடல் உபகரணங்கள் இல்லாதது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. மீன்பிடி அமைச்சின் செயலாளர், இந்த வருடத்தில் அனைத்து உபகரணத் தேவைகளையும் பூர்த்தி செய்ய கொள்வனவுப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். எனவே, இந்த வருடத்திற்குள் அவற்றை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியும் என விசேடமாக வலியுறுத்தினார்.
மீன்பிடித் தொழில் அபாயங்கள் நிறைந்த தொழில் எனவும், அண்மையில் ஏற்பட்ட பல படகு விபத்துக்களினால் உயிர் இழப்புகள் ஏற்பட்டது ஒரு பாரிய பிரச்சினை எனவும் பிரதி அமைச்சர் மேலும் வலியுறுத்தினார். இந்த நிலமையைக் கருத்தில் கொண்டு, மீனவர்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காக உயிர்காப்பு அங்கிகளை அணிவது கட்டாயமாக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டது. அரசாங்கத்துடன் கலந்துரையாடி, நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று இச்செயற்திட்டங்களை விரைவாகச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மாவட்ட மீன்பிடி ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெற்றிகரமாக செயற்படுவதாகவும் அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார். இக்குழுக்கள் மூலம் மீன்பிடித் தொழிலை மேம்படுத்துவதற்கும், மீனவ சமூகத்திற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் விரைவாக வழங்குவதற்கும் அரசாங்கம் உறுதியாக உள்ளது. 2026 ஆம் ஆண்டளவில் இலங்கையின் மீன்பிடித் தொழிலை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும். மீன்பிடித் துறைமுக முகாமையாளர்கள் தங்கள் துறைமுகங்கள் தொடர்பான குறுகிய கால மற்றும் நீண்ட கால வேலைத்திட்டங்கள் குறித்த திட்ட அறிக்கைகளை விரைவாகத் தயாரிக்குமாறும் இதன்போது கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் பிரத்தியேக செயலாளர் எச். எஸ். ஹதுருசிங்க உள்ளிட்ட இலங்கை மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.