சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கற்ற (IUU) மீன்பிடி நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கும், கடல்சார் கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்கும் இலங்கை பிரான்சின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித்த கமல் ஜினதாச அவர்கள், பிரான்ஸ் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ பிரான்ஸ் விஜயமொன்றை மேற்கொண்டு, பிரான்ஸ் தேசிய மீன்பிடி கண்காணிப்பு மையத்தின் (CNSP) பணிப்பாளர் திரு. அலெக்சிஸ் மொரெல் மற்றும் அவரது குழுவினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.
பிரான்சின் மீன்பிடி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், கடல்சார் சூழலைப் பாதுகாப்பதற்கும் பொறுப்பான பிரதான நிறுவனமான CNSP, அதன் செயல்பாட்டு நடைமுறைகள் குறித்து இலங்கை தூதுக்குழுவிற்கு விளக்கமளித்தது. குறிப்பாக, கப்பல் கண்காணிப்பு முறைமையின் (Vessel Monitoring System - VMS) பயன்பாடு குறித்து இங்கு விரிவான விளக்கக்காட்சி அளிக்கப்பட்டது.
இலங்கை கடலோர காவல்படை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளித்தல், VMS கண்காணிப்பு நடவடிக்கைகளில் பிரான்சின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் மென்பொருள் ஆதரவைப் பெறுதல் ஆகிய சாத்தியக்கூறுகள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த ஒத்துழைப்பின் மூலம் இலங்கையின் கடல்சார் பாதுகாப்பையும், மீன்பிடித் துறையின் நிலைத்தன்மையையும் கணிசமாக மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தைகளின் பின்னர், அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் குறித்த மையத்தைப் பார்வையிட்டு, அங்கு தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைக் கண்காணித்தனர். இந்தியப் பெருங்கடல் தொடர்பான திட்டங்களுக்கான எதிர்கால ஒத்துழைப்பில் ஆர்வம் வெளிப்படுத்தப்பட்டது.