en banner

WhatsApp Image 2025 06 25 at 16.24.54

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில், பிரதி அமைச்சர் ரத்ன கமகேவின் பங்கேற்புடன் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 25.06.2025 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது இந்திய மீனவர்கள் பிரச்சினை, சட்டவிரோத முறைகளை பயன்படுத்தி மீன் பிடித்தல், தென்னிலங்கை மீனவர்களின் பிரச்சனைகள், மீன்பிடிக்கான இறங்கு துறைகளை புனரமைத்தல், மயிலிட்டி, பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பிரதிநிதிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு கலந்துரையாடப்பட்டன.

இக் கலந்துரையாடலில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன், அமைச்சின் மேலதிக செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் பிரதீபன், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸார், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.

மீனவர்களுக்குரிய ஓய்வூதியத் திட்டம் எதிர்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என்று கடற்றொழில்,நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியவை வருமாறு, 

'மயிலிட்டி துறைமுகத்தை அபிவிருத்தி செய்யப்போகின்றோம். நவீன திட்டங்களுக்குரிய அதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.  நிதி ஒதுக்கீடுகளும் செய்யப்பட்டுள்ளன. நெடுந்தீவு பகுதியில் கடலரிப்பு அதிகரித்துள்ளது. அப்பகுதியில் கடல் அணைகளை அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

மீனவர்களுக்குரிய ஓய்வூதியம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜுலை முதலாம் திகதி முதல் இது அமுலுக்கு வரும். இதற்கு மீனிவர்களின் பங்களிப்பு அவசியம். மீனவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே மாவட்டம் தோறும் அபிவிருத்தியக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

தொடர்ச்சியாக இக்கூட்டங்கள் நடைபெறும். மீனவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும். பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். எமது அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் பங்கேற்று வருகின்றனர். எமது பிரதி அமைச்சர்கூட கலந்துகொண்டு வருகின்றார். எனவே, இக்கூட்ட நடைமுறை சிறப்பாக உள்ளது.

காணி விடுவிக்கப்படும், அது விடுவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. 37 வருடங்கள் திறக்கப்படாத வீதிகள்கூட தற்போது திறக்கப்பட்டு வருகின்றன. பாரிய தொழில்பேட்டையை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்பேட்டை மற்றும் விமான நிலையத்துக்கு தேவையான காணிகள்தவிர, ஏனையவை நிச்சயம் விடுவிக்கப்படும். மயிலட்டியை கைவிட்டு சென்ற மக்கள், இன்று போராடிவருகின்றனர்.  37 வருடங்களாக அம்மக்களுக்கு உள்ள பிரச்சினை நிச்சயம் தீர்க்கப்படும்." - என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரத்ன கமகே, எதிர்வரும் காலங்களில் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அவர்கள் எழுத்து மூலமாக மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக திட்டமிடல் பணிப்பாளரிடமும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரிடமும் கையளிக்கலாம். அத்தோடு, தடைசெய்யப்பட்ட மீன்பிடியை கட்டுப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் வைத்து வடபகுதி கடற்படை தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளுடன் இது தொடர்பில் கதைத்துள்ளோம். வெகு விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுப்படும் நபர்களுக்கு மன்னிப்பு வழங்க கூடாது என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளதாகவும், அவ்வாறான செயல்களுக்கு அரசியல் தலையீடுகளும் இருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Image 2025 06 25 at 16.24.43

WhatsApp Image 2025 06 25 at 16.24.24

WhatsApp Image 2025 06 25 at 16.24.48

WhatsApp Image 2025 06 25 at 16.25.02

 

சமீபத்திய செய்திகள்

Youtube