கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இன்று (ஜூன் 03) ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) ஏற்பாடு செய்திருந்த மீன்பிடி மற்றும் நீரியல் வளர்ப்பு அபிவிருத்திப் பங்காளர் செயற்குழுவின் (Development Partners Working Group on Fisheries and Aquaculture) இரண்டாவது காலாண்டு கூட்டத்தில் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பங்காளர்கள், தூதரகப் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகம் (UNODC), ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் ஜைக்கா (JICA) போன்ற சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கடற்றொழில் துறை இலங்கைக்கு வெறும் பொருளாதாரத் துறை மட்டுமல்ல, அது ஒரு ஜீவாதாரமாகும் என்று அமைச்சர் வலியுறுத்தினார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2% பங்களிப்பதுடன், நாட்டின் விலங்கு புரதத் தேவைகளில் 50% க்கும் அதிகமானவற்றை பூர்த்தி செய்கிறது. மேலும், இது தொழிலாளர் படையில் 3.7% இற்கு அண்மையானோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதுடன், வருடாந்தம் 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான வெளிநாட்டு வருமானத்தையும் ஈட்டித் தருகிறது. இந்தக் கடற்றொழில் துறை, குறிப்பாக கடலோர சமூகங்களின் வாழ்க்கையை நேரடியாகப் பாதிக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அமைச்சு சார்பாக மேலதிக செயலாளர் (மீன்பிடி வள முகாமைத்துவம்) தம்மிக ரணதுங்க அவர்கள் அரசாங்கத்தின் கொள்கைகள், கடற்தொழில் துறையின் முன்னுரிமைகள், அடையாளம் காணப்பட்ட சவால்கள் மற்றும் அவற்றுக்கான முன்மொழியப்பட்ட தீர்வுகள் குறித்து விரிவான விளக்கவுரையை வழங்கினார்.
உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) தனது "ரீஃப்" (REEF) நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை முன்வைத்தது. அத்துடன், சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) வட மாகாணத்தில் கடல் தாவர (seaweed) மற்றும் திலாப்பியா (tilapia) மீன் வளர்ப்புத் திட்டத்தை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தது.
கடற்றொழில் துறை எதிர்கொள்ளும் சவால்கள் சிக்கலானவை என்றாலும், அவை வெற்றி கொள்ள முடியாதவை அல்ல என்றும், வலுவான பங்காளித்துவங்கள் மூலம் அவற்றை எதிர்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சிறு அளவிலான மீன்பிடி சமூகங்களை, குறிப்பாகப் பெண்களையும் இளைஞர்களையும் மேம்படுத்துவதற்கும், நீரியல் வளர்ப்புத் திறனை வளர்ப்பதற்கும், நிலையான மீன்பிடி முகாமைத்துவத்திற்கும், தரவு அடிப்படையிலான கொள்கை வகுப்பிற்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வழங்கிய தொடர்ச்சியான ஆதரவுக்கு அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கையின் கடற்தொழில் அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அதிக மற்றும் அவசர கவனம் செலுத்துமாறும், அமைச்சு முன்மொழிந்த முன்னுரிமைத் துறைகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் எந்தவொரு தரப்பினரும் அமைச்சருடன் கலந்துரையாடுமாறும் அனைத்து அபிவிருத்திப் பங்காளர்களிடமும் அமைச்சர் பணிவுடன் கேட்டுக்கொண்டார்.
முன்னுரிமைத் துறைகள்:
- நீரியல் வளர்ப்பை வலுப்படுத்துதல்: காலநிலை மாற்றங்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட இனங்களை உள்ளடக்கி புதிய தொழில்நுட்பங்கள், மேம்படுத்தப்பட்ட மீன்குஞ்சு வளர்ப்பு .
- இழப்புகளைக் குறைக்கவும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் மீன்பிடிப் படகுகள் மற்றும் குளிர்பதனக் கட்டமைப்புகளை நவீனமயமாக்குதல்.
- ஊட்டச்சத்து உணர்திறன் திட்டங்கள், சுகாதார சேவைகளுக்கான அணுகல் மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான அபிவிருத்தி மூலம் கடலோர சமூகங்களின் மீள்திறனை கட்டியெழுப்புதல்.
- எல்லை தாண்டிய மீன்பிடி சவால்களைத் தீர்க்க பிராந்திய ஒருங்கிணைப்பு வழிமுறைகளுக்கு ஆதரவளித்தல்.
இந்தச் சவால்களுக்குப் பதிலளிக்கும் வகையில், அமைச்சு பல முக்கிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார். புதிய தேசிய மீன்பிடி மற்றும் நீரியல் வளர்ப்பு கொள்கை இறுதி செய்யப்பட்டு வருகிறது. அத்துடன், நவீன யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையில் திருத்தப்பட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டம்
தயாரிக்கப்பட்டு வருகிறது. அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைப்பதற்கும், ஏற்றுமதிப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கும், மதிப்பு கூட்டல் செயல்முறைகளை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. இந்தத் துறையில் பெண்களின் பொருளாதார வலுவூட்டல் மற்றும் எந்தவொரு மீனவ சமூகத்தையும் கைவிடாமல் இருப்பதும் அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த இலக்குகளைத் தனியாக அடைய முடியாது என்றும், இதற்கு தொழில்நுட்ப வழிகாட்டல், நிதி ஆதரவு மற்றும் இராஜதந்திர ஒத்துழைப்பு அத்தியாவசியம் என்றும் அமைச்சர் நிறைவாக குறிப்பிட்டார். எதிர்கால தலைமுறைகளுக்காக சமுத்திரத்தைப் பாதுகாப்பதற்கும், மீனவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், மீள்திறன் கொண்ட, அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான நீலப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் இணைந்து செயல்படுமாறு அமைச்சர் அனைவரையும் கேட்டுக்கொண்டார்.
உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) விவசாய மற்றும் கடற்தொழில் துறைகள் இரண்டையும் உள்ளடக்கும் வகையில் ஒரு கூட்டு செயல்திட்டத்தை (Action Plan) 2025 ஆகஸ்ட் மாதத்திற்குள் முன்வைக்க எதிர்பார்ப்பதாக இந்தக் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.
பங்குபற்றுதல்
இந்த நிகழ்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பி. கே. கோலித்த கமல் ஜினதாச, மேலதிக செயலாளர் (மீன்பிடி வள முகாமைத்துவம்) தம்மிக ரணதுங்க, அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.