கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தலைமையில் புத்தளம் மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜூன் 18 அன்று புத்தளம் மாவட்டச் செயலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் புத்தளம் மற்றும் மகாவெவ கடற்றொழில் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவ சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், ஹிருனி விஜேசிங்ஹ, மற்றும் கயான் ஜானக குமார ஆகியோர் உள்ளிட்ட பல பிராந்திய அரசியல் அதிகாரிகள் கலந்துகொண்டனர். அத்துடன், புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவிலங்குத் திணைக்களம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல முக்கிய கடற்றொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அத்துடன் கடற்றொழில் அமைச்சின் கீழ் உள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகக் கூட்டுத்தாபனம், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம், நாரா (NARA) நிறுவனம் மற்றும் நாக்டா (NAQDA) நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், கற்பிட்டி, வெள்ளமன்கரை மற்றும் சிலாபம் ஆகிய கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
வெள்ளமன்கரை கடற்றொழில் துறைமுகம்: பல நாள் படகுகளை நங்கூரமிடுவதற்கு போதுமான வசதிகள் இல்லை என்று கடற்றொழில் சமூகத்தினர் சுட்டிக்காட்டினர். இதற்குத் தீர்வாக, வெள்ளமன்கரை துறைமுக வசதிகளை விரிவுபடுத்துவதற்காக ஒரு புதிய இறங்குதுறை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தி, வரவுசெலவுத் திட்ட முன்மொழிவை சமர்ப்பிக்க பிரதி அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.
சிலாபம் கடற்றொழில் துறைமுகம்: பிற பிரதேசங்களிலிருந்து வருகை தந்து மீன் விற்பனை செய்வதிலும், இறங்குதுறையில் இடவசதி போதாமை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும், முகத்துவாரம் மூடப்பட்டிருப்பதால் படகுகள் போக்குவரத்துக்கு ஏற்படும் தடங்கல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடற்றொழிலாளர்களின் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார். இறங்குதுறையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து கள ஆய்வு நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
கற்பிட்டி கடற்றொழில் துறைமுகம்: 1982 இல் கட்டப்பட்ட பழைய இறங்குதுறை சேதமடைந்துள்ளதாகவும், அதை உடனடியாகப் பழுதுபார்க்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது. இந்தப் பிரச்சினை குறித்து உரிய ஆய்வுகளை மேற்கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பிரதி அமைச்சர் அறிவுறுத்தினார்.
இதுதவிர, கடலோர அரிப்பைத் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வுகளைக் கண்டறிதல் மற்றும் நண்டு, இறால் வளர்ப்பு தொடர்பான பிரச்சினைகள், குறிப்பாக குஞ்சுகளின் பற்றாக்குறை குறித்தும் விவாதிக்கப்பட்டது. கடலோர அரிப்புக்கு நீண்டகால தீர்வுகளுக்கு முன்கூட்டிய ஆய்வுகள் தேவை என்று பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார். இறால் வளர்ப்பு தொடர்பிலும், டச்சு கால்வாய் அசுத்தமடைந்து மூடப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தி, அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி அதைச் சீர் செய்ய நடவடிக்கை எடுப்பதாக பிரதி அமைச்சர் உறுதியளித்தார்.
இந்தக் கூட்டம், கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளை அவர்களுக்கு நெருக்கமாகச் சென்று தீர்ப்பதற்கான ஒரு வெற்றிகரமான அணுகுமுறை என்று இதில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரும் இந்த முயற்சியைப் பாராட்டினர் என்றும் பிரதி அமைச்சர் கூறினார். இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவத்தார்.