கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ.கே. கோலித கமல் ஜினதாஸ ஆகியோர் டென்மார்க்கிற்கான தங்களது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடந்த 24 ஆம் திகதி அந்நாட்டின் முன்னணி வர்த்தக மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் பிரதானிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இங்கு நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் அதன் முன்னேற்றங்கள் பின்வருமாறு:
1. உலகின் கப்பல் போக்குவரத்துத் துறையில் ஜாம்பவானாகத் திகழும் ‘MAERSK’ நிறுவனத்துடனான சந்திப்பு:
உலகின் இரண்டாவது மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான MAERSK இன் தலைமையகத்தில், அந்நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு அதிகாரி (Chief Product Officer - Ocean) ஜோஹான் சிக்ஸ்கார்ட் (Johan Sigsgaard) அவர்களை அமைச்சர் சந்தித்து விசேட பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது, இலங்கையின் கடற்றொழில் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், கடல்சார் துறையில் அனுபவம் வாய்ந்தவர்களுக்கும் MAERSK நிறுவனத்தின் சர்வதேச கப்பல்களில் தொழில் வாய்ப்புகளை (Seafarers) பெற்றுக்கொடுப்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையில் உள்ள கடல்சார் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து செய்முறைப் பயிற்சி வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும், அதன் ஊடாக இலங்கையர்களுக்கு விசேட வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டினைப் பெற்றுக்கொள்வதற்கும் தேவையான முன்மொழிவொன்றை (Proposal) சமர்ப்பிப்பதற்கு இங்கு அடிப்படை இணக்கம் காணப்பட்டது.
2. டென்மார்க் கைத்தொழில் மன்றத்துடனான (Danish Industry) சந்திப்பு:
டென்மார்க்கின் முன்னணி வர்த்தக சங்கமான ‘Danish Industry’ இன் சிரேஷ்ட ஆலோசகர் ஒலே லினெட் ஜூல் (Ole Linnet Juul) அவர்களைச் சந்தித்த இலங்கைத் தூதுக்குழுவினர், இலங்கையின் கடற்றொழில் துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், நிலைபேறான கடல்சார் சுற்றுலாத்துறை, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் நவீன மீன் பதப்படுத்தும் நிலையங்களை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கமளித்தனர். இலங்கையின் முன்னுரிமைகளை அடையாளம் கண்டு, அத்துறைகளை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்குவதற்கு டென்மார்க் தரப்பினர் இதன்போது சம்மதம் தெரிவித்தனர்.
3. அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கான முதலீட்டு நிதியம் (IFU / Impact Fund Denmark):
அதனைத் தொடர்ந்து, ‘Impact Fund’ இன் முகாமைத்துவப் பணிப்பாளர் ஓட்டோ வின்டர் கிறிஸ்டென்சன் (Otto Vinther Christensen) அவர்களுடனான சந்திப்பில், இலங்கையின் அரச மற்றும் தனியார் துறை செயற்திட்டங்களுக்குக் குறைந்த வட்டியிலான சலுகைக் கடன் வசதிகளைப் பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. விசேடமாக பசுமை சக்தி மற்றும் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு இந்த நிதியத்தின் ஊடாக ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன், இது குறித்து இலங்கை தொழில்முனைவோரைத் தெளிவுபடுத்துவதற்காக இலங்கையில் நடைபெறவுள்ள முதலீட்டு மாநாடொன்றில் (Investment Forum) கலந்துகொள்ளுமாறு அமைச்சர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சர்வதேச தொழில் வாய்ப்புகளை வென்றெடுப்பதற்கும் இந்தத் தொடர் பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஒரு வலுவான அடித்தளம் இடப்பட்டுள்ளதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்தினார்.







