Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Ministry of Fisheries,
Aquatic & Ocean Resources

Share
16 October 2026
'கடற்றொழில் சேவையின் பலம்' - காலி மாவட்டம்...

“கடல்சார் பிரச்சினைகளுக்கு கரையில் ஒரு தீர்வு” எனும் தொனிப்பொருளின் கீழ், ஆழ்கலின் சவால்களை வெற்றி கொள்ளும் மீனவ சமூகத்தின் அன்றாட நிர்வாக மற்றும் சேவைப் பிரச்சினைகளுக்கு கரையிலேயே விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘கடற்றொழில் சேவையின் பலம்’ நடமாடும் சேவையின் காலி மாவட்டத்துக்கான நிகழ்ச்சி திட்டம் இன்று (16) தொடந்துவ மீன்பிடித் துறைமுக வளாகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களம் ஆகியன இணைந்து இந்த நடமாடும் சேவையை ஏற்பாடு செய்திருந்தன.

ஐம்பதிற்கும் மேற்பட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையின் மூலம் மீனவ சமூகத்திற்கு அத்தியாவசிய சேவைகள் பல விரைவாகவும் முறைமையாகவும் வழங்கப்பட்டன. இதன் கீழ் புதிய படகுகள் பதிவு செய்தல், பதிவுத் தகவல்களைத் திருத்துதல், படகு உரிமங்களை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், அத்துடன் மீனவர்களின் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை பொறுப்பேற்று தொடர்புடைய பிரிவுகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் நிறைவேற்றிக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரதி அமைச்சர் ரத்ன கமகே, இந்த நடமாடும் சேவை திட்டம் கௌரவ கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் வழிகாட்டலின் கீழ் செயல்படுத்தப்பட்டது என்பதனை சுட்டிக்காட்டினார். அத்துடன், இதற்காக அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளிடமிருந்தும் அதிகபட்ச ஒத்துழைப்பு கிடைத்ததையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், அரசாங்கம் மீனவ சமூகத்தை இலக்காகக் கொண்டு பல்வேறு விசேடத் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருவதாகக் கூறிய பிரதி அமைச்சர், கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் எனவும், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகளை எதிர்வரும் மாதத்தில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிப்படுத்தினார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் உள்ளிட்ட பல மீன்பிடித் துறைமுகங்களை அபிவிருத்தி செய்வதற்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் சிலவற்றின் அபிவிருத்திப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முடிந்தவரை குறைத்து முன்னோக்கிச் செல்வதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்பதன் காரணமாக, அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் அதேவேளையில் இதுபோன்ற சேவைத் திட்டங்களும் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் என பிரதி அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

இந்த நடமாடும் சேவையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சுடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மேலதிகமாக இதில் பங்கேற்ற முக்கிய அரச நிறுவனங்களில் பாதுகாப்பு அமைச்சு, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு, வளிமண்டலவியல் திணைக்களம், காலி மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், இலங்கை பொலிஸ், இலங்கை கடற்படை, தேசிய அடையாள அட்டை அலுவலகம், கரையோர பாதுகாப்பு திணைக்களம் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவம் போன்ற அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் இணைந்து கொண்டன.

மேலும், இந்த நிகழ்வில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், தென் மாகாண கடற்றொழில் அமைச்சின் செயலாளர், சி-நோர் நிறுவனத்தின் தலைவர், இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் தலைவர், நாரா மற்றும் நெக்டா உள்ளிட்ட இணை நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

காலி மாவட்ட பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள், காலி மாவட்ட மீன்பிடி அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் பெருந்திரளான மீனவ  சமூகத்தின் பங்கேற்புடன் இந்த நடமாடும் சேவை வெற்றிகரமாக நடைபெற்றது.

 

Latest News