02 October 2026
நிலையான நீலப் பொருளாதாரத்தின் எதிர்காலத்திற்காக விஞ்ஞானத்தின் திசை: '37வது நாரா சர்வதேச விஞ்ஞான அமர்வு' ஆரம்பம்!
தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மை (NARA) ஏற்பாடு செய்த 37வது சர்வதேச விஞ்ஞான அமர்வு இன்று (02) நாரா தலைமையகத்தில் பெருமையுடன் ஆரம்பமானது.
இந்தச் சிறப்புமிக்க நிகழ்விற்குக் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
“Aquatic Research for Climate Resilience, Food Security, and Blue Growth” என்ற காலத்திற்கேற்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த அமர்வில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் மற்றும் துறைசார்ந்த பல தரப்பினர் கலந்துகொண்டனர். கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, அறுவடைக்குப் பிந்திய தொழில்நுட்பம், நீரியல் உயிர்த் தொழில்நுட்பம், நீரியல் சூழல் மற்றும் காலநிலை மாற்றம், கடல் விஞ்ஞானம், அத்துடன் கடற்றொழிலின் சமூக–பொருளாதார விஞ்ஞானம் உள்ளிட்ட பல முக்கிய துறைகள் தொடர்பான புதிய ஆய்வுக் கட்டுரைகளும் கண்டுபிடிப்புகளும் இங்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சபையில் உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் கடற்றொழில் துறை தனித்துவமான பங்கை ஆற்றுகிறது என்றும், உலகளாவிய காலநிலை சவால்களுக்கு மத்தியிலும் மீனவ சமூகத்தை மேம்படுத்தி இலங்கையில் வலுவான ‘நீலப் பொருளாதாரத்தை’ கட்டியெழுப்ப அரசாங்கம் முழுமையான பங்களிப்பை வழங்கும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், நாரா நிறுவனம் மேற்கொள்ளும் இத்தகைய ஆய்வுகளின் மூலம் வழங்கப்படும் விஞ்ஞான ரீதியான வழிகாட்டல்களும் தரவுகளும் எதிர்கால தேசிய கடற்றொழில் கொள்கைகளை வகுப்பதற்கு மிக முக்கியமானவை என்பதையும் அவர் வலியுறுத்தினார். அத்துடன், இந்த விஞ்ஞான ஆய்வுகளைச் சாதாரண மீனவ மக்களும் பயன்படுத்துவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலம் இத்துறையின் தொடர்ச்சியான நிலைத்திருப்பை உறுதிசெய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மாநாட்டில் உரையாற்றிய அமைச்சின் செயலாளர் கலாநிதி பி.கே. கோலித கமல் ஜினதாஸ, கடற்றொழில் துறையின் தீர்மானங்கள் வெறும் மரபுகளின் அடிப்படையில் அன்றி, தொடர்ச்சியான மற்றும் நம்பகமான ‘தரவுகளை’ அடிப்படையாகக் கொண்ட விஞ்ஞான ஆதாரங்களின் மீதே எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். மேலும், எமது நீரியல் வளத்தை வெறும் உணவுத் தேவைக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் போன்ற புத்தாக்கங்களை உருவாக்கும் ‘நீரியல் உயிர்ப் பொருளாதாரத்தை’ (Aquatic Bioeconomy) நோக்கி நாம் முன்னேற வேண்டும் என்றும், ஆய்வுகளை வெறும் ஆய்வுக் கட்டுரைகளுடன் நிறுத்திவிடாமல் அவற்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் வணிகமயமாக்கல் (Research → Prototype → Pilot → Commercialization) வரை கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மாநாட்டின் பிரதான உரையை ஜப்பானின் கடல்கடந்த மீன்பிடி ஒத்துழைப்பு அறக்கட்டளையின் (OFCF) கடற்றொழில் நிபுணர் கலாநிதி புஜினோ தடனோரி நிகழ்த்தினார். இந்த விஞ்ஞான அமர்வில், துறைக்குப் பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்கிய சிறந்த ஆய்வுகளைக் கௌரவித்து விருதுகள் வழங்கப்பட்டதுடன், நாரா புகைப்படப் போட்டியின் வெற்றியாளர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.
இது தவிர, இந்நிகழ்வில் தேசிய நீரியல் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவராண்மையின் தலைவர் பேராசிரியர் சனத் ஹெட்டியாராச்சி, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் நவுராஸ் நசார், இலங்கை மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கபில பமுனுஆராச்சி, சினோர் (Cey-Nor) நிறுவனத்தின் தலைவர் வசந்த மான்னப்பெரும, இலங்கை கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் சமந்த குணசேகர ஆகியோரும், நாரா நிறுவனத்திற்கு விஞ்ஞான ஆய்வுகள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளுக்கான வசதிகளை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
















