29 September 2026
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக நிர்மாணப் பணிகளை பார்வையிட்ட பிரதி அமைச்சர் ரத்ன கமகே...
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் 1,134 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்றுவரும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக திட்டத்தின் பணிகள் குறித்து ஆராய்வதற்காக பிரதி அமைச்சர் ரத்ன கமகே இன்று (29) கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
குறிப்பாக, இறங்குதுறை நுழைவுச்சாலை, பாதுகாப்புச் சுவர் அமைப்பு மற்றும் அதற்கு இணையாக மேற்கொள்ளப்படும் ஏனைய புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. அத்துடன், துறைமுக வளாகத்திற்கு வருகை தந்திருந்த மீனவச் சமூகத்தினரைச் சந்தித்து சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதி அமைச்சர், கடற்றொழில்த்துறையில் அவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து விசாரித்ததுடன், அந்தப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண்பது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
இந்த நிகழ்வில் மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனத்தின் தலைவர், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் (பொறியியல்), வாழைச்சேனை மீன்பிடித்துறைமுக முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், பிராந்திய மீனவப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
உள்ளூர் கடற்றொழில் தொழிற்துறையை மேம்படுத்தி, மீனவச் சமூகத்தின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்துவதற்காக அமைச்சு முன்னெடுத்துவரும் வேலைத்திட்டத்தின் மேலும் ஒரு வெற்றிகரமான படியாக இதைக் குறிப்பிடலாம்.












