21 August 2026
சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக நிர்வகிக்க புதிய வேலைத்திட்டம்
இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை சர்வதேச தரநிலைகளுக்கு அமைவாக முறையாக நிர்வகித்து, சுறா இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் அண்மையில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சில் நடைபெற்றது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி பீ. கே. கோலித கமல் ஜினதாச தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இலங்கையின் பலநாள் மீன்பிடிப் படகுகளில் சுறா மீன்கள் பிரதான பிடிப்புடன் இணைந்த இடைப்பிடிப்பாக (By-catch) பிடிக்கப்படுகின்றன. சுறா மீன்களின் துடுப்புகள், செவுள்கள், தாடைகள் மற்றும் தோல்கள் உள்ளிட்ட பகுதிகளும், உயிருள்ள அலங்கார சுறா இனங்களும் ஏற்றுமதி செய்யப்படுவதன் மூலம் நாட்டிற்கு கணிசமான அளவு அந்நியச் செலாவணி கிடைத்து வருகின்றது.
எனினும், உலகளவில் பல சுறா இனங்கள் அழிவின் அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள நிலையில், இத்தொழிலை சர்வதேச விதிமுறைகள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாக பொறுப்புடன் நிர்வகிப்பது அவசியமானது என கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டது. இதற்கமைய, நாட்டில் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள சுறா இனங்களைப் பாதுகாப்பதுடன், சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்ட சுறா இனங்களை மாத்திரம் ஏற்றுமதி செய்வதை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பலநாள் மீன்பிடிப் படகுகளில் பிடிக்கப்படும் ஒவ்வொரு சுறா மீனும் பிடிக்கப்பட்ட இடத்திலிருந்து இறுதி நுகர்வோர் வரை சென்றடையும் பாதையைத் துல்லியமாகக் கண்காணிக்கக்கூடிய வகையில் முறையான தரவு சேகரிப்பு மற்றும் தடமறிதல் (Traceability) முறைமையொன்றை உருவாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுறா மீன்களின் பிடிப்பு, பதப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி தொடர்பான தகவல்களை முறையாகப் பதிவு செய்து கண்காணிக்க முடியும்.
மேலும், தற்போது ஏற்றுமதி செய்யப்படும் சுறா மீன் பாகங்கள் மற்றும் குறிப்பாக உயிருள்ள அலங்கார சுறா மீன்களின் ஏற்றுமதி அளவை மேலும் அதிகரிக்காமல், தற்போதுள்ள மட்டத்திலேயே கட்டுப்படுத்திப் பேணுவதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இதேவேளை, தேசிய நீர் வளங்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு முகவரகம் (NARA), சுறா மீன் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து, விரிவான சுறா மீன் முகாமைத்துவத் திட்டமொன்றை தயாரிக்கவுள்ளது. குறித்த முகாமைத்துவத் திட்டத்தை இந்த வருட இறுதிக்குள் தயாரித்து சமர்ப்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சு, கடற்றொழில் திணைக்களம் மற்றும் NARA ஆகிய நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள இந்த புதிய வேலைத்திட்டத்தின் மூலம், இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலை வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும், சர்வதேச சட்டங்கள் மற்றும் தரநிலைகளுக்கு அமைவாகவும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கலந்துரையாடலில் NARA நிறுவனத்தின் அதிகாரிகள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.










