31 July 2026
மேற்கு மற்றும் வடமேற்கு கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும்: யாழ்ப்பாணம் முதல் பேருவளை வரை சிறிய ரகப் படகுகள் கடலுக்குச் செல்ல தடை – கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

நாட்டின் மேற்கில் இன்று (2026/07/31) இரவு வேளை முதல் நிலவக்கூடிய மழை உடனுடான வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிப்பதன் காரணமாக, தீவைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தினால் முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்தான நிலையைக் கருத்திற் கொண்டு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு. சுசந்த கஹவத்த அவர்களினால் அனைத்து மீனவ சமூகத்திற்குமான அவசர பாதுகாப்பு அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் களுத்துறை (பேருவளை வரை) ஆகிய கடற்பரப்புகளில் கரையோரப் பகுதிகளில் தொழிலில் ஈடுபடும் சிறிய ரக மற்றும் ஒருநாள் கடற்றொழில் படகுகள் மறுஅறிவித்தல் வரை தொழிலுக்காகக் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

குறிப்பாக, இப்பகுதிகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரை வெகுவாக அதிகரிக்கக்கூடும் என்பதுடன், அதனுடன் அலைகளின் சீற்றமும் அதிகரிப்பது சிறிய ரகப் படகுகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டுகின்றார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த திரு. சுசந்த கஹவத்த அவர்கள்:
“நிலவும் மோசமான வானிலை காரணமாகக் கரையோரக் கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், மீனவர்களின் உயிர்ப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போது கடலுக்குச் சென்றுள்ள சிறிய மற்றும் ஒருநாள் கடற்றொழில் படகுகள் இருப்பின், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பாகக் கரை திரும்புமாறு கேட்டுக்கொள்கின்றேன். இரவு வேளையில் காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், எக்காரணம் கொண்டும் தேவையற்ற ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டாம் என அனைத்து மீனவர்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.”

நிலவும் வானிலை நிலைமைகள் குறித்து கடற்றொழில் திணைக்களம் மற்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் மேலதிக அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ச்சியான அவதானத்துடன் இருக்குமாறும், தமது உயிர் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு குறித்துப் பொறுப்புடன் செயற்படுமாறும் திணைக்களம் மேலும் கேட்டுக்கொள்கின்றது.

Share

Latest News